Wednesday, May 02, 2007

"ஒரு சகாப்தத்தின் வரலாறு" - பெரியார் திரைப்பட விமர்சனம்



நடிப்பு: சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி

தயாரிப்பு: லிபர்டி கிரியேஷன்ஸ்

இயக்கம்: ஞான ராஜசேகரன்

இசை: வித்யாசாகர்

சினிமாவை,‘இந்த நாட்டை பிடித்த நோய்’ என்றவர் பெரியார். சினிமாக்காரர்களை வெறும் கூத்தாடிகள் என்று கண்டித்தவர் அவர். நாடு உருப்பட இந்த சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசி வந்தவர். இப்போது அவரைப் பற்றியே ஒரு சினிமா. அவர் இருந்து பார்த்திருந்தால் தனது தடியால் தட்டி மகிழ்ச்சி அடைந்திருப்பார். பெரியாரின் நோக்கம் சிதையாமல், எண்ணம் திரிக்கப்படாமல் இப்படியரு படம் தயாரிக்கப்பட்டிருப்பதே பாராட்டப்பட வேண்டியது.

சாதி பாகுபாடு, பால் வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு& இதுவே அவரின் மையப்புள்ளி. மற்றவை கிளைக் கதைகள். இதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட இயக்குனராக ஞான ராஜசேகரன் இருந்தது பெரியாரின் அதிர்ஷ்டம்!

பண வசதி படைத்த ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் என்ற வைணவ குடும்பத்தில் பிறந்த பெரியாரின் 19&வது வயதில் தொடங்குகிறது படம். மூப்பு, கிழப்பருவம் தாண்டிய முதிர் கிழப்பருவத்தில் கூட அமைதியாக இல்லாமல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, நான் உங்களை சூத்திரனா விட்டுவிட்டு போகிறேனே என்று துக்கம் தொண்டையிலடைக்க மேடையில் சரிவதில் முடிகிறது படம். சரியாகச் சொன்னால் அவர் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் நடந்த காட்சி இது.

ஈரோடு வட்டாரத்தில் மட்டுமே அறிமுகமாகியிருந்த வியாபாரி பெரியார், காந்தியின் நிர்மாணத் திட்டங்களால் காங்கிரஸ் இயக்கத்தில் நுழைந்து, வகுப்புவாரி இடஓதுக்கீடுக் கொள்கையை அவரின் நண்பர்களே ஏற்காமல் துரோகம் செய்ததால் வெகுண்டெழுந்து, காஞ்சிபுரம் மாநாட்டில் வெளியேறியது வரை படத்தின் முதல்பாதி. காங்கிரசை ஒழிப்பதே முதல் வேலை என வெளியேறி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பயணமாகி, எது தனக்கு சரியெனப்பட்டதோ அதை மட்டுமே பேசி, சுயமரியாதைத் தலைவராக வலம் வந்து தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அனைவருக்கும் கட்டளையிடும் தந்தையாக பரிணாமம் பெறுவது இரண்டாவது மீதி.

முதல்பாதியில் இருக்கும் காட்சிப்படுத்தல், இடைவேளைக்குப் பிறகு துணுக்குகளின் கோர்வையாகி விடுகிறது. எந்த பிரபலத்தையும் புறக்கணித்துவிடக் கூடாது, எந்த தகவலையும் விட்டுவிடக்கூடாது என்ற பதற்றத்தில் சில காட்சிகள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. உடல் நலமில்லாத பெரியாரை, ராஜாஜி பார்க்க வருவது, பிரசவத்துக்குத் துடித்த பிராமணப் பெண்ணுக்கு தனது வாகனத்தை கொடுத்து உதவுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் சில முக்கியமான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். உதாரணத்துக்கு,பெரியாரிடம் சண்டை போட்டுவிட்டு அண்ணா விலகிய ஓராண்டுக்குப் பின் இருவரும் திருச்சி சிறையில் சந்திப்பது, சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய காட்சி.

இதுபெரியார் படம் என்பது போலவே சத்யராஜ் படம். நக்கல், நையாண்டியால் மட்டுமே பேர் வாங்கிய சத்யராஜுக்குள் இப்படியரு தனித்தன்மை ஒளிந்திருந்தது ஆச்சர்யம்தான். பட்டுத் துணிகள், அங்கவஸ்திரத்துடன் வலம் வந்த பெரியார், அதை தூக்கியெறிந்து விட்டு கதர் துணி அணியும்போது சத்யராஜ் அச்சு அசலாகவே பெரியாராகிவிடுகிறார்.

நெஞ்சுக்கும் மேலே லுங்கியை கட்டிக்கொண்டு, கருப்பு சட்டைப் பட்டனை திறந்துவிட்டபடியே மேடையிலிருந்து எழுந்து நிற்கும்போது பெரியாராகவே வாழ்கிறார் சத்யராஜ். பெரியாரின் குரலையும் அதனதன் தன்மைக்கு ஏற்ப மாற்றி உச்சரிப்பது சிறப்பு. 18 ஆண்டு பிரிவுக்கு பிறகு, சந்திக்க வந்த அண்ணாவைப் பார்த்து பெரியார் வெட்கப்படும் காட்சிக்கு கூடுதல் சபாஷ் போடலாம்.

முதல் மனைவி நாகம்மையாக ஜோதிர்மயியும், இரண்டாவது மனைவி மணியம்மையாக குஷ்புவும் வாழ்ந்திருக்கிறார்கள். எந்த சாயமும் இல்லாத அழகு சாயல் கொண்டவர் நாகம்மை. சாதாரண ராமசாமியை பெரியார் ஆக்கியவர் அவர். நாகம்மை போன்றே இயல்பான முகம் ஜோதிர்மயிக்கு. அதேபோல் மாட்டுத் தொழுவ விருந்தில், சாணி மணம் பாராமல் பெரியார் சாப்பிட மணியம்மை திணறும் காட்சியில் அசத்துகிறார் குஷ்பு.

தங்கர்பச்சான், ராஜ்குமாரின் ஒளிப்பதிவு அந்தக் காலத்தை கண்முன் நிறுத்துகிறது. வைரமுத்துவின் பாடல் வரிகள் பெரியார் கொள்கையை பேசுகிறது.

‘ராமர் தொட்டதால் அணில் முதுகில் மூன்று கோடு வந்ததென்றால், சீதை முதுகில் எத்தனை கோடு உண்டு, அல்லது சீதையை ராமன் தொடவே இல்லையா?’ என்ற வரிக்கு தியேட்டரில் பறக்கிறது கைதட்டல்.

பெரியாரை பற்றி தெரியாத, உணராத தலைமுறைக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாலே அது பெரிய வெற்றி. இந்தப் படம் அதை செய்திருக்கிறது.

நன்றி: தினகரன்.




சட்டசபை உறுப்பினர்களுக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் "பெரியார்"படம் நேற்று திரையிடப்பட்டது. இதற்கு வந்திருந்த முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன், தி.க.தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு உள்ளிட்டோர் சிரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

14 Comments:

Blogger சிவபாலன் said...

இது தினகரனில் வெளியான திரை விமர்சனம். உங்கள் பார்வைக்கு..

நன்றி: தினகரன்

May 02, 2007 6:30 PM  
Anonymous Anonymous said...

விமர்சன பதிவுக்கு நன்றி சிபா !
- ஜிகே

May 02, 2007 6:33 PM  
Blogger Thamizhan said...

பெரியார் ஒரு சகாப்தம்.மூன்று மணி நேரத்திலே படைத்தது பெரியாரின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ள தூண்டுகோளாக இருக்குமானால் அது பெரிய வெற்றி ஆகும்.
பெரியாரை வெறுப்பவர்கள் மனித நேயத்தைப் புரிந்து கொணடவர்களாக இருக்க முடியாது.

May 02, 2007 6:56 PM  
Blogger ஜோ/Joe said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சிவபாலன்.

May 02, 2007 7:26 PM  
Blogger வெற்றி said...

சிவபாலான்,
பதிவுக்கு நன்றி.

/* பெரியாரை பற்றி தெரியாத, உணராத தலைமுறைக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாலே அது பெரிய வெற்றி. இந்தப் படம் அதை செய்திருக்கிறது. */

அறிஞர் அண்ணா, மற்றும் ஈழத்தமிழர்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றிருக்கும் மறைந்த முதல்வர் அமரர் இராமச்சந்திரன் போன்றோரின் வரலாறுகளை அறிந்த அளவுக்கு எனக்கு பெரியார் பற்றி அவ்வளவாகத் தெரியாது.

இப் படத்தின் மூலம் அவர் பற்றி மேலும் அறியலாம் என நம்புகிறேன்.

May 02, 2007 8:12 PM  
Anonymous Anonymous said...

பெரியார் பட பிரிவ்யூவிற்க்கும் கூட மஞ்சள் துண்டை மாற்றாமல் வந்த கொள்கைக்குன்று தமிழினத்தலைவர் டாக்டர். கலைஞர் வாழ்க!!!!!!

May 02, 2007 8:37 PM  
Anonymous Anonymous said...

பெரியாரை தன் கட்சியின் தலைவர்களில் ஒருவராக வைத்திருக்கும் பச்சை தலைவி "ஜெ" நடத்தும் யாகங்களைவிட மஞ்சள் துண்டு பரவாயில்லை..

May 02, 2007 8:51 PM  
Blogger விழிப்பு said...

விமர்சனம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டுகிறது.நன்றி சி.பா.

சிங்கைல எப்போ வரும் என்று தெரியவில்லை. வந்தவுடன் பார்க்க வேண்டும்.

-விழிப்பு

May 02, 2007 9:14 PM  
Anonymous Anonymous said...

//உடல் நலமில்லாத பெரியாரை, ராஜாஜி பார்க்க வருவது, பிரசவத்துக்குத் துடித்த பிராமணப் பெண்ணுக்கு தனது வாகனத்தை கொடுத்து உதவுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் சில முக்கியமான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.//

யாரையோ சரிக்கட்ட செய்தது போலத்தான் இருக்கிறது

May 02, 2007 9:37 PM  
Blogger லக்கிலுக் said...

நன்றி சிவபாலன்!

May 03, 2007 3:26 AM  
Blogger PRABHU RAJADURAI said...

"பெரியார் பட பிரிவ்யூவிற்க்கும் கூட மஞ்சள் துண்டை மாற்றாமல் வந்த கொள்கைக்குன்று தமிழினத்தலைவர் டாக்டர். கலைஞர் வாழ்க!!!!!!"

:-))

May 03, 2007 8:22 AM  
Anonymous Anonymous said...

பொரியார் மாதிரம் இல்லனா சிலரு
மைல்கல்லுக்கும்,பர்லாங்குகல்லுக்கும்,
ஒரு துணியசுத்தி மைலோஸ்வர்,
பர்லாங்கேஸவர்ன்னுவாங்கங்குறேன்.
அப்படி நான் சொல்லுல,
பெருந்தலைவர் காமராசர்சொன்னாங்க.

May 04, 2007 7:54 AM  
Blogger சீனு said...

//இப்போது அவரைப் பற்றியே ஒரு சினிமா.//

ஆனா இது ஒரு ரசிக்கத்தக்க sweet irony தானே?

//நான் உங்களை சூத்திரனா விட்டுவிட்டு போகிறேனே என்று துக்கம் தொண்டையிலடைக்க மேடையில் சரிவதில் முடிகிறது படம்.//

படிக்கும் போதே அந்த மனிதரின் ஏக்கம் புரிகிறது. கண்டிப்பா படத்தை மிஸ் பன்னமாட்டேன்.

//பெரியாரை பற்றி தெரியாத, உணராத தலைமுறைக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாலே அது பெரிய வெற்றி. இந்தப் படம் அதை செய்திருக்கிறது.//

அதே போல, காமராஜ் படம் பாருங்கள். உண்மையிலேயே இந்த அரசியல் சூழ்நிலையில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பெரியார் படம் இன்னும் பார்க்கவில்லை. கட்டாயம் பார்க்கனும்.

May 04, 2007 12:34 PM  
Anonymous Anonymous said...

The film "Periyar" is just en eulogy & nothing else. He had so many faults & not one was shown in the film.

Very mediocre effort. Only saving grace was satyaraj's acting.

November 19, 2008 11:43 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv