இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு GRAND SALUTE!
சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். 1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.
குமுதம் தீராநதியில் வெளிவந்த அவருடைய பேட்டி, இங்கே உங்கள் பார்வைக்கு. முழுவதும் படிக்க தீராநதி இதழைப் பார்க்கவும்.
தீராநதி: நீங்கள் விரும்பினாலும் திரும்ப இயலாத ஒரு தேசமாக இலங்கை மாறிக் கொண்டு வருகிறது. இந்த அரசியல் நெருக்கடிகள் உங்களை எந்த அளவிற்குப் பாதித்திருக்கிறது?
அ. முத்துலிங்கம்: மாணவனாயிருக்கும்போதே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு கொழும்பிலிருந்து கப்பல்களில் யாழ்ப்பாணம் போய்த் தப்பியவர்களில் நானும் ஒருவன். என் குடும்பம், உறவினர், சிநேகிதர் என்று எல்லோரும் அந்தக் கப்பலில் இருந்தனர். எனக்கு அப்போதிருந்த ஒரே சொத்து நான் படிக்கும் பாடப் புத்தகங்களும், சேர்த்து வைத்திருந்த இலக்கிய நூல்களும்தான். அவற்றை ஒவ்வொன்றாகத் திரும்பவும் சேர்க்கவேண்டி வந்தது. என்னுடைய சகோதரர் குண்டுவீச்சில் வீட்டை இழந்தார். என்னுடைய சகோதரிகள் சொத்தை இழந்தனர். எனக்கு எல்லாமாயிருந்த அண்ணன் சமீபத்தில் ஊரடங்குச் சட்டத்தின்போது நிராதரவாக மருத்துவமனையில் காலமானார். நான் ஓய்வு பெற்று கனடாவைத் தேர்ந்தெடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அடிக்கடி கனடாவின் அதி உயர்ந்த படைப்பாளியான அலிஸ் மன்றோ கூறியதை நினைத்துக்கொள்வேன். ‘நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு.’
தீராநதி: இலங்கையில் சிங்களவர் மட்டுமே நிறைந்திருந்த ஒரு நிறுவனத்தில் தனியான ஒரு தமிழ் மேலதிகாரியாக கடமையாற்றியிருக்கிறீர்கள். அன்று உங்களுள் நடந்த பாதுகாப்பு, அச்ச மன உணர்வுப் போராட்டம் குறித்துப் பேசலாமா?
அ. முத்துலிங்கம்: நான் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு நுழைவுத் தேர்வு எழுதி அனுமதி பெற்றபோது, எங்கள் புகுமுக வகுப்பில் 55 சதவீதம் தமிழர்களாகவும் மீதி சிங்களவராகவும் இருந்தார்கள். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த ஒரு நாட்டின் பல்கலைக்கழகத்தில் தமிழர் தொகை அதிகமாக இருந்தது. எங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் படிப்பித்த பேராசிரியர்களும் தமிழர்களாகவே இருந்தார்கள். நாங்கள் வகுப்பில் அகரவரிசைப்படி அமர்வோம். எங்கள் வரிசையில் முனசிங்க என்ற சிங்களவர் இருந்தது ஞாபகம். சிங்களம், தமிழ் என்ற பேதம் எங்கள் மனங்களில் அப்போது இல்லை. விரிவுரைகள் ஆங்கிலத்திலேயே நடக்கும். இயற்பியல் பேராசிரியர் கரும்பலகையில் சிக்கலான விடையைத் தேடும்போது உரத்த குரலில் 'ஏழு எட்டு அம்பத்தாறு', 'நாலு ஆறு இருபத்தி நாலு' என்று பெருக்கல் வாய்பாட்டைச் சொல்லிச் சொல்லி எழுதுவது சர்வ சாதாரணம்.
இரண்டாவது வருடம் இனப்போர் வெடித்தது. தமிழர்கள் கொலை செய்யப்பட்டு, வீடு வாசல் இழந்து அகதிகள் ஆனார்கள். அமைதி ஏற்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினால், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சிங்களம், தமிழ் என்ற பிரிவு ஏற்பட்டதை என் கண்ணால் கண்டேன். அதன் பின்னர் பிளவு கூடியதே ஒழிய ஒன்று சேரவில்லை. நான் வேலையில் சேர்ந்தபோது எனக்கு மேலதிகாரியாக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவரின் கீழ் நான் நாலைந்து வருடங்கள் வேலை பார்த்தேன். அவர் நாட்டை விட்டுக் கிளம்பியதும் அவர் பார்த்த வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் ஒருவனே அப்போது தமிழன். எனக்கு மேலேயிருந்த இயக்குனர் சேர்மன் ஒரு பிரபலமான சிங்களவர்; ஜனாதிபதியின் சகோதரர். கம்பெனி இருந்தது சிங்களப் பிரதேசத்தில். வெள்ளைக்கார அதிகாரி இருக்கும்வரைக்கும் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு தமிழ் மேலதிகாரி சிங்கள ஊழியர்களிடம் வேலை வாங்குவது சிரமமானது. நிர்வாகம் கண்டிப்பும் கருணையும் கலந்து இருக்கவேண்டும். ஒரு சின்னத் தகராறு என்றாலும் வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்துவிடுவார்கள். முட்டை மேலே நடக்கும் வித்தை.
ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்ததுதான் தாமதம், திரும்பிப் பாராமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டேன்.
தீராநதி: நவீனம், பின்நவீனம் என்பது குறித்தெல்லாம் விவாதங்கள் தமிழில் நடத்தப்படும் காலம் இது. உங்களின் படைப்புகளில் இவற்றிற்கான சிறு கூறுகளைக் கூட பார்க்க முடியவில்லை. இக்கோட்பாடுகள் பற்றிய உங்களின் அளவீடு என்ன?
அ. முத்துலிங்கம்: நீங்கள் கேட்ட இதே கேள்வியை நான் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர், புலிட்ஸர் பரிசு பெற்ற Frank McCourt அவர்களிடம் ஒருமுறை கேட்டேன். அவர் சொன்ன பதிலையே கீழே தருகிறேன். 'நான் ஒரு கதைசொல்லி. கதைதான் எனக்கு முக்கியம். நான் modern, postmodern என்றெல்லாம் நினைப்பதில்லை.' அதையேதான் நானும் சொல்கிறேன். மேலும், இலக்கியம் என்பது உண்மையை நோக்கிய ஒரு பயணம். பின்நவீனத்துவம் உண்மை என்று ஒன்றில்லை. அது மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறது. ஆகவே எனக்கு அது எப்படிப் பொருந்தும். ஆதியிலிருந்து மனிதன் கதை சொல்லி வந்திருக்கிறான். எழுத்து பிறப்பதற்கு முன்னரே கதை பிறந்துவிட்டது. ஆப்பிரிக்காவிலே சில இனக் குழுவினர் பேசும் மொழிக்கு எழுத்துரு கிடையாது. காலம் காலமாக வாய்மொழியாக வந்த கதைகளையே சொல்கிறார்கள். எங்கள் இதிகாசங்கள், ஹோமரின் இலியட், ஒடிசி எல்லாம் வாய்மொழியாக வந்து பின்னர் எழுத்துரு பெற்றவை. தொன்று தொட்டு வந்த கதை வடிவம் இது. 2000 வருட காலத்துக்கு இது தாக்குப் பிடித்தால், மேலும் 2000 வருட காலத்துக்கு இந்த முறை நிற்கும். நியூட்டனின் புவி ஈர்ப்பு விதிகளைக் கேட்ட மாணவன் ஆசிரியரிடம் 'எத்தனை வருடங்களுக்கு திருப்பித் திருப்பி அதே விதிகளைக் கட்டி மாரடிப்பது. அலுத்துவிட்டது, எனக்கு புது விதிகள் வேண்டும்' என்று சொன்னது போலத்தான்.
மேற்கிலே அவர்கள் பின்நவீனத்துவத்தைக் கைவிட்டு நாளாகிவிட்டது. இங்கே பின்நவீனத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் அதிலே முயற்சிசெய்து பார்க்கலாம்; தவறே இல்லை. எப்படிப் பார்த்தாலும் தமிழுக்கு லாபம்தான்.
தீராநதி: வருங்கால தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஈழப் படைப்பாளிகளாகவே இருப்பார்கள் என்று முன்பொரு முறை கார்த்திகேசு சிவத்தம்பி பேசி இருந்தார். அதை உறுதிப்படுத்துவது போல இன்று ஷோபா சக்தி, புஷ்பராஜா, நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ் நவீன இலக்கியத்தை வேறு முனைப்போடு நகர்த்திக் கொண்டு செல்கிறீர்கள். ஒட்டுமொத்தமான ஈழ இலக்கியம் குறித்து உங்களின் மதிப்பீடு என்ன?
அ. முத்துலிங்கம்: ஈழத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்துக்குப் புது வேகம் கொடுத்து முனைப்போடு நகர்த்திச் செல்கிறார்கள். அது உண்மை. இலங்கையில் நிலவும் போர்ச்சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது புலம்பெயர்ந்த இடத்தில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களாக இருக்கலாம். ஆனால், நான் எப்படி வருங்கால தமிழ் இலக்கியத்தை ஈழத்துப் படைப்பாளிகளே முன்னெடுத்துச் செல்வார்கள் என்று தீர்க்கமாகச் சொல்லமுடியும்? ஐம்பது வருடத்துக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவன் அல்லவா அதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
தமிழ் சினிமாவுக்கு தமிழில் தலைப்பு வைத்தால், அதற்கு சலுகை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இப்படி உலகத்தில் வேறு எங்கேயும் நடக்குமா? போர்ச்சுகல்லில் எடுக்கும் ஒரு படத்துக்கு போர்ச்சுகல் தலைப்பு வைக்கவேண்டும் என்று அரசு சொல்லுமா? தமிழிலே தலைப்பு வைத்துவிட்டு உள்ளே முற்றிலும் ஆங்கிலப் பாடலாக இருந்தால் என்ன செய்வது? கொடுத்த சலுகையைப் பிடுங்கிவிடுவார்களா? ‘இலக்கணம்’ என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் படம் சமீபத்தில் வந்தது. படம் ஏனோதானோ என்று இருந்தாலும், அதில் வந்த வசனங்களில் ஓர் ஆங்கிலச் சொல்கூட இல்லை. ஓரிடத்திலும் நான் வசனம் புரியாமல் முழிக்கவில்லை. இயற்கையாகவே இருந்தது. இது பாராட்டத்தக்கது. கனடாவுக்கு யாராவது வந்தால் நான் சில புதுமைகளை அவர்களுக்குக் காட்டுவேன். கனடியத் தமிழ்த் தொலைக்காட்சியில் நடக்கும் ஒத்திகை இல்லாத நேரடி ஒளிபரப்பு விவாதங்கள் முற்றுமுழுதாக தமிழ் வார்த்தைகளிலேயே நடக்கின்றன. வானொலியில் செய்திகள் சுத்தமான தமிழில், நல்ல உச்சரிப்புடன் வருகின்றன. சாதாரண உரையாடல்களில் தனித்தமிழ் நுழைந்துவிட்டது. நான் கேட்ட கவியரங்கம் ஒன்றில் இப்படி ஒரு கவிதை. (மன்னிக்கவும், நினைவில் இருந்து சொல்லுகிறேன்). updating என்றால் பொருள் இற்றைப்படுத்துதல்.
கணினியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_ படுத்தினேன். கைப்பேசியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_படுத்தினேன். காதலைச் சொல்ல மறுக்கிறாய், கைகோர்க்க மறுக்கிறாய், கட்டிப்பிடிக்க மறுக்கிறாய். இருபதாம் நூற்றாண்டில் இன்னமும் இருக்கிறாயே! உன் இருதயத்தை இற்றைப்படுத்து இற்றைப்படுத்து என் இனியவளே. கனடிய அரசாங்கம் தமிழிலே தலைப்பு வைப்பதற்கு, கவிதை எழுதுவதற்கு, செய்தி வாசிப்பதற்கு ஒரு சலுகையும் தருவதில்லை. ஈழத்தமிழர்கள் தாங்களாகவே செய்கிறார்கள். English dictionary, American dictionary என்பதுபோல வருங்காலத்தில் 'ஈழத்தமிழ் அகராதி' என்று ஒன்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்கள் அவ்வளவு வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீராநதி: அரசியல் தன்மையற்ற ஒரு நபராகவே நீங்கள் இருக்கிறீர்கள். இலங்கை அரசியல் நெருக்கடி குறித்தெல்லாம் ஏதாவது கருத்துகள் உங்களிடம் உள்ளனவா, மறுக்காமல் பேசுங்கள்?
அ. முத்துலிங்கம்: எதைச் சொல்கிறீர்கள்? என் சிறுகதைகள் ஏன் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? இலங்கைப் பின்னணியில் நேர்த்தியான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் வந்துகொண்டே இருக்கின்றன. நேரடி அனுபவம் இல்லாததால் நான் ஆழமாகப் பதிவுசெய்ய முடிவதில்லை ஆனால், என்னுடைய எத்தனையோ சிறுகதைகளில் ஈழத்து காட்சிகள் வந்து வந்து போகும். புதுமைப்பித்தன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதவில்லை. எமிலி டிக்கின்ஸன் அமெரிக்க உள்நாட்டுப் போர் பற்றி அவர் எழுதிய 1700 கவிதைகளில் ஒன்றில்கூட எழுதவில்லை. அதற்காக அவர்கள் அதுபற்றிக் கவலைப்படவில்லை என்று ஆகிவிடுமா?
பல நாடுகளில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க சட்டம் இயற்றுவார்கள். ஆனால், உலகிலேயே ஒரு பெரும்பான்மையைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்த நாடு இலங்கையாகத்தான் இருக்கும். இங்கே எப்படி ஜனநாயகம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம். ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிட்டது. அவர்கள் போனால் போகட்டும் என்று விட்டுக்கொடுப்பதுதானா நீதி? பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் ஜனநாயகம் இயங்கவேண்டும் என்றால், சிறுபான்மைக்குப் பாதுகாப்பு அரசியல் சட்டத்திலேயே ஐயத்துக்கு இடமில்லாமல் சொல்லப்பட்டிருக்கவேண்டும். அல்லாவிடில் சிறுபான்மைக்கு விமோசனமே கிடையாது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ‘தீர்வு வந்துவிடும், தீர்வு வந்துவிடும்’ என்று உலகம் எதிர்பார்த்தது. மறுபடியும் போர் என்றால் இழப்பு இரண்டு பக்கமும்தான். உலகிலே எத்தனையோ பாரிய பிரச்சினைகள். ஈராக், பாலஸ்தீனம், சூடான். யார் இலங்கைப் பிரச்சினையை கவனிக்கிறார்கள்; எல்லோருமே கைவிட்டுவிட்டார்கள். தீர்வை அவர்களாகத்தான் தேடவேண்டும்.
தீராநதி: எழுதுவதைத் தவிர வேறு ஏதாவது ஈடுபாடுகள் உங்களுக்கு கனடாவில் உள்ளனவா?
அ. முத்துலிங்கம்: தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு கனடாவில் இருக்கிறது. அதில் நான் இயங்கி வருகிறேன். தன்னார்வலர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், லாபநோக்கற்ற குழுவாக ரொறொன்ரோவில் பதிவுசெய்யப்பட்டது. இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான விருதை வழங்கி கௌரவிக்கிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் தங்கள் நாடுகளில் இலக்கியம் படைப்பவர்களுக்கு கௌரவம் செய்கிறது. ஆனால், இந்த அமைப்பு உலகளாவிய ரீதியில் செயல்படுகிறது. சென்ற வருடம் இந்த விருது பேர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட்டுக்கு வழங்கப்பட்டது. இது நாடு, சமயம், நிறம், சாதி கடந்தது. இதற்கான ஒரு நிதியம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரொறொன்ரோ ஆர்ட்ஸ் கவுன்சில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தியிருக்கிறது. இதற்கு நடுவர்கள் 15 பேர் இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சுற்றுமுறையில் விருதுத் தேர்வுக் குழுவில் பணியாற்றுவார்கள். தமிழ் இலக்கிய சாதனை விருது மட்டுமல்லாமல், மேலும் மூன்று பரிசுகளும் வருடாவருடம் வழங்கப்படுகின்றன. புனைவு இலக்கியம், அபுனைவு இலக்கியம், சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனை விருது. தமிழின் எதிர்காலம் தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் பெரிதும் தங்கியிருக்கிறது. ஆகவே, இந்த விருது முக்கியத்துவம் பெறுகிறது. மற்ற விருதுகள் போல இதுவும் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் பூட்டிய அறைக்குள் இருந்து தமிழ்ச் சேவை புரியும் தகவல் தொழில்நுட்பக்காரர் ஒருவருக்குப் போய்ச்சேரும்.
அடுத்து நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தமிழ் விக்கிபீடியாவில். இது ஒரு கலைக்களஞ்சியத்துக்குச் சமம். ஆனால் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் விக்கிபீடியாவை இணையம் மூலம் உலகில் எங்கிருந்தும் யாரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, இது கல்வியாளர்களால் மாத்திரம் உருவாக்கப்படுவது இல்லை. யாரும் எழுதலாம். எவரும் பங்கு பற்றி திருத்தங்கள் செய்யலாம். ஆகவே, கட்டுரைகளில் ஆசிரியர் பெயர் இராது. ஆங்கிலத்தில் உள்ள விக்கிபீடியாவில் பத்து லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் தெலுங்கில் 26000 கட்டுரைகள், வங்காளியில் 12700 கட்டுரைகள் சேர்ந்துவிட்டன. தமிழ் விக்கிபீடியா இந்த மாதம் 10,000 கட்டுரைகள் இலக்கை தொட்டுவிட்டதாக அறிகிறேன். அதற்கும் கீழே ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று வருகிறது. என்னுடைய வேலை எனக்குத் தெரிந்த படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் என்று அணுகி அவர்களிடம் கட்டுரை பெற்று களஞ்சியத்தில் சேர்க்க உதவுவது. தங்கள் பெயர் வராததால் பலர் தயங்குகிறார்கள். உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வத் தமிழர்கள், இந்தப் பணியில் முழுமூச்சுடன் வேலை செய்கிறார்கள். இந்த வருடம் முடிவதற்கிடையில் கட்டுரைகளின் எண்ணிக்கையை 20,000_க்கும் மேலாக உயர்த்தும் முயற்சியில் இருக்கிறார்கள்.
ரொறொன்ரோவில் எனக்குத் தெரிந்த ஓர் இளைஞரின் பெயர் நற்கீரன். பொறியியல் முதுகலை படிக்கிறார். நாளுக்கு இரண்டு மணித்தியாலம் ஒதுக்கி இதற்காக உழைக்கிறார். அவருக்கு இதனால் ஒரு சதம் லாபம் இல்லை. முழுக்க முழுக்க தமிழ்ச் சேவை என்பது இதுதான். உலகம் முழுக்க வாழும் கல்வியாளர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மனமுவந்து உதவவேண்டும். கட்டுரைகளை எழுதி 'தமிழ் விக்கிபீடியா' என்று தலைப்பிட்டு யாரும் natkeeran@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். றீ
_ சந்திப்பு : கடற்கரய்
படங்கள் : அப்பாத்துரை
29 Comments:
"தமிழ் இனி மெல்லச் சாகும்"
யார் சொன்னது, கடைசி இலங்கைத் தமிழனின் மூச்சு இருக்கும் வரை அதற்கு சாத்தியமில்லை..
வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு! வளர்க உங்கள் தமிழ்ப் பற்று!
சிவபாலன்!! உங்கள் முயற்சியால் ஒரு அருமையான கட்டுரையை வாசிக்க முடிந்தது. நன்றி ஐயா.
புள்ளிராஜா
புள்ளிராஜா
முடிந்தால், குமுதம் தீராநதிக்கு சென்று முழு நேர்காணலையும் படித்துப்பாருங்கள். பல விசயங்களை மிக அழகாக விளக்கியுள்ளார்.
நன்றி
//தமிழ் இனி மெல்லச் சாகும்"
யார் சொன்னது, கடைசி இலங்கைத் தமிழனின் மூச்சு இருக்கும் வரை அதற்கு சாத்தியமில்லை..//
சரியா சொன்னீங்க சிவபாலன்.
நன்றி இளா!
சிவபாலன்
கட்டுரை படித்தேன்.
இந்த grand salute, தமிழில் சொல்ல முடியாதா???
யோகன் அண்ணா,
உண்மையில் எனக்கு தெரியவில்லை! அதனால் தான் அப்படியே வைத்தேன்.
"சிறப்பான வணக்கம்" என்று சொல்லலாமா?
கருத்துக்கு நன்றி!
பெரியவரின் தமிழ்த்தொண்டை அனைவர்க்கும் எடுத்துச் சென்றதற்கு மிக்க நன்றி.
தமிழில் பேசுவோம்,தமிழில் எழுதுவோம் என்று ஒவ்வொருவரும் கடைப் பிடித்தால் மகிழ்வாக இருக்கிறது.எழுதுவ்தும் இணையத்தில் எளிதாகி விட்டது என்பதை எடுத்துச் சொல்வோம்.
குழந்தைகட்கு ஆங்காங்கே தமிழ் பள்ளிகள் ,திருக்குறள் போட்டிகள் என்று உலகெங்கும் வந்து கொண்டுள்ளதை ஊக்குவிக்கலாம்.
சினிமா,அரசியல் பேசுவதைக் குறைத்துக் கொண்டு நாம் படித்த நல்ல இலக்கியத்தை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி ஆர்வத்தை உண்டாக்கலாம்.
குடும்பம் குடும்பமாகத் தமிழ் புத்தகக் குழுக்கள் மாதம் ஒரு முறை என்று வைத்து மகிழலாம்.
பரிசுகள் கொடுப்பது பெரும்பாலும் நல்ல தமிழ் நூல்களாக இருப்பது மகிழ்வு தருகிறது.
இணையத்தில் ஈழ்த் தமிழ் நிகழ்ச்சிகள் நல்ல தமிழில் கேட்பது மிக்க மகிழ்வாக இருக்கிறது.
ibc.com 24 மணி ஒலி பரப்பு.
itharkellam kaaranam iizha thamilarukku English sariya theriyaathathu thaan kaaranam
இப்போதே இப்படி என்றால் தமிழீழம் அமைந்தால் தமிழின் நிலை என்னவென்று எண்ணிப்பாருங்கள்.
---updating என்றால் பொருள் இற்றைப்படுத்துதல்.
கணினியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_ படுத்தினேன். கைப்பேசியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_படுத்தினேன். காதலைச் சொல்ல மறுக்கிறாய், கைகோர்க்க மறுக்கிறாய், கட்டிப்பிடிக்க மறுக்கிறாய். இருபதாம் நூற்றாண்டில் இன்னமும் இருக்கிறாயே! உன் இருதயத்தை இற்றைப்படுத்து இற்றைப்படுத்து என் இனியவளே.---
good
சிவபாலன்,
தீராநதி செவ்வியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ஈழத்தில் நல்ல தமிழ் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவர்களின் குழந்தைகள் சுத்தமான தமிழ் கதைப்பார்கள் என்று சொல்ல முடியாது. புலத்தில் பிறந்து வாழும் சில ஈழத்தவர்களின் பிள்ளைகள் தமிழே கதைக்கத் தெரியாமலும் இருக்கிறர்கள்.
சிவபாலன்,
எல்லோரும் 'சல்யூட்' அடிக்கிறீர்கள்.
நியாயமாகப்பார்த்தால் நாங்கள் இந்த 'சல்யூட்' அது இது எல்லாம் எதிர்பார்க்கவில்லை. இணையத்தில் 'சல்யூட்' அடிப்பது இலகு.
எமது போராட்டம் வெற்றியடைய என்ன செய்யப்போகிறீர்கள்.
மிக நல்ல ஒரு நேர்காணலை எங்களுக்கு அறியச் செய்ததற்கு நன்றி சிவபாலன். கண்டிப்பா வெக்கலாம்யா ஒரு சல்யூட்.
சுவையான கதையும் அதைவிடச் சுவையான பின்னூட்டங்களும்
"யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சிவபாலன்
கட்டுரை படித்தேன்.
இந்த grand salute, தமிழில் சொல்ல முடியாதா???"
தலை வணங்குதல்.
புள்ளிராஜா
//எல்லோரும் 'சல்யூட்' அடிக்கிறீர்கள்.
நியாயமாகப்பார்த்தால் நாங்கள் இந்த 'சல்யூட்' அது இது எல்லாம் எதிர்பார்க்கவில்லை. இணையத்தில் 'சல்யூட்' அடிப்பது இலகு.
எமது போராட்டம் வெற்றியடைய என்ன செய்யப்போகிறீர்கள். //
ஈழம் என்பது உங்கள் பிரச்னையா இல்லை எங்கள் பிரச்னையா? ரொம்பவே அதிகாரம் செய்கிறீர்களே!!
உங்கள் போராட்டம் நீங்கள்தானே செய்ய வேண்டும்.
அதுதானே முறை?
எங்களை என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உதவியும் செய்து விட்டு அதற்கு கெட்ட பெயரையும் நாங்கள் வாங்க வேண்டும் அதுதானே வேண்டும் உங்களுக்கு.
எதற்க்காக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
ஊருக்குள் யாருக்கும் வேலை இல்லையா என்ன.
அவரவர்க்கு அவரவர் ப்ரசினை.
நான் ஏன் உங்கள் பிரச்னையை தூக்கிக்கொண்டு அலைய வேணுமென் கிறீர்கள்?
ஒரு வெளி நாட்டுக்கரரான உங்களுக்கு நான் எதற்காக உதவ வேண்டும்?
உங்களுக்கும் எனக்கும் தமிழ் பேசுகிறோம் என்பதை தவிர என்ன சம்பந்தம்?
பழைய கதை எல்லாம் வேலைக்குதவாது நண்பரே. எங்கள் அரசியல்வாதிகளின் வெட்டி பேச்சை எல்லாம் கேட்டு உணர்ச்சிவசப்பட வேண்டாம். அதெல்லாம் வெறும் வரட்டு (வாக்கு) வாதம் மட்டுமே. உங்கள் யுத்தத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். எங்களுக்கான தொடர் யுத்தங்கள் தயாராகவே இருக்கின்றன. நான் நிதானம் தவறினால் என் யுத்ததில் நான் தோற்று போவேன். எனக்கு உதவியாக யாரும் வர மாட்டர்கள்.
என் போராட்டம் வெற்றி அடைய எனக்கு வாழ்த்துங்கள்.
உங்கள் போராட்டம் வெற்றி அடைய என் வாழ்த்துங்களை பிடியுங்கள்.
இது யதார்த்தம்.
இது பெரும்பாலான தமிழ் நாட்டு தமிழ் மக்களின் மன நிலை. இது புரியாமல் போனாலோ, இல்லை நீங்கள் என்னை கிண்டல் செய்தாலோ, இல்லை திட்டினாலோ என் பதில் ஒரு புன்னகை மட்டுமே. :)
என் கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்பதற்க்காக இதை பதியவில்லை. அதை எதிர்பார்க்கவுமில்லை. உங்களுக்கு உங்கள் கருத்துப்பக்கத்தின் மறுபக்கத்தை சொல்ல வேண்டுமென்பதே என் நோக்கம். உங்கள் மனம் புண் பட வேண்டும் என்பதல்ல. அப்படி பட்டிருந்தால் மன்னிக்க.
சிவபாலன்,
நேர்காணல் சுவைபட நன்றாக இருந்தது.
நிச்சயம் ஈழத்தவர் தமிழுக்கு நல்ல சேவை செய்கிறார்கள்.
ஆனால் சல்யூட் என்பது அதிகம் என்பது என் கருத்து.
(salyut adikkaravanga adichikungo. support panravango pannikungo. naan varala intha aatathukku.)
:)
நன்றி.
//சூரிய வெப்பத்தில் (கடல் ஆமையின்) முட்டைகள் பொரிக்கும். வெளியே வந்த குஞ்சுகள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து வழிதேடி கடலில் போய்ச் சேர்ந்து கொள்ளும். நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர், காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழி தேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். அப்படி நம்பிக்கை' இப்படிச் சொல்கிறார் முத்துலிங்கம் 'மகாராஜாவின் ரயில் வண்டி' சிறுகதைத் தொகுதிக்கான சமர்ப்பணப் பகுதியில். அதுமட்டுமல்ல, அந்த வாசகருக்கும் அந்த உலகத்துக்கும் தனது நூலைச் சமர்ப்பிக்கிறார். இந்தக் கூர்ந்த கவனிப்பு, அக்கறை, உள்ளுணர்வு, செழுமையான மொழி, துல்லியமான சித்திரிப்பு--இவைதாம் அ. முத்துலிங்கம்.//
This is borrowed from the May issue of Thendral
magazine!
//..ஈழம் என்பது உங்கள் பிரச்னையா இல்லை எங்கள் பிரச்னையா? ரொம்பவே அதிகாரம் செய்கிறீர்களே!!
உங்கள் போராட்டம் நீங்கள்தானே செய்ய வேண்டும்.
அதுதானே முறை?...//ந
நன்றி நண்பரே! உங்கள் பின்னூட்டமே நான் எதிர்பார்த்தது.
அதனால்தான் சொல்கிறேன் எமது போராட்டம் என்கின்ற களத்துக்கப்பால் ஈழத்தமிழர் 'தமிழ் இலக்கியத்தை உலகத்தரத்துக்கு கொண்டுபோதல்' அது இது என்று நேரத்தை வீணாக்குகிறார்கள். உங்கள் பின்னூட்டம் உறைத்திருக்கும் என நினைக்கிறேன்.
ஏன் இந்த நேர்காணலின் நாயகன் அ.முத்துலிங்கத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். அவர் எனது பக்கத்தூர்க்காரர்தான். ஆனால் ஈழப்போர் சார்ந்து ஒரேஒரு கதை (சிறுகதை) மட்டுமே எழுதியுள்ளார். கேட்டால் போராட்டம் எனக்குப்பரிச்சயமில்லாதது என 'ரெக்னிக்கலாக' சொல்லி தப்புகிறார். அவருக்கு கொஞ்சப்பேர் 'சல்யூட்' அடிக்கிறார்கள். அதுவும் இணையத்தில் மட்டும் தான்!!!
இதை நம்பு ஒரு கூட்டம் வருடாவருடம் அவன் இவன் என்று சினிமாக்கோஷ்டியிடமும், கவிப்பேரரசுகளிடமும் டொலரிலும் யூரோவிலும் வாரி இறக்கிறார்கள்.
இந்த அருமையான பதிவில் அரசியலைக் கலக்க வேண்டியுள்ளது.ஆனால் அனைவ்ரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மையை ஒரு அநாமதேயத்தின் வாயிலாகக் கேட்டு விட்டோம்.ஆம்!
தமிழ் பேசுகிறவர்கள் அனைவரும் தமிழரல்லர்.
நண்பர்களே!நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லியுள்ளார்.கட்டாயம் புரிந்து நடந்து கொள்ள வேண்டுகிறேன்.
சிவபாலன்,
ஈழத்தவரின் தமிழ் சேவையை நேரில் காண வேண்டும் என்றால் Yahoo Chat தமிழ் நாடு அறை எண் 1, மற்றும் 2 இல் வந்து பாருங்கள். வெகுசில ஈழ நண்பர்கள் தவிர ஏனையோர் பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை. சண்டை போட்டு கெட்ட வார்த்தை பேசவேண்டும் என்றே வருபவர்களிடம் என்ன பேச முடியும்? வெறுத்து விட்டது. ஈழத்தவரிடம் இருந்த மதிப்பு போய் விட்டது.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்தற்று.
யானை தன் தலையில் ......
யாரை நோவது?
Lankiez.
தென்றல் மே மாத இதழை இணையத்தில் படிக்கலாம். இவருடைய சிறுகதை ஒன்று அதில் வெளி வந்திருக்கிறது.
மனத்தை மிகவும் தொட்ட கதை. இதற்கு முன் இவர் யார் என்றே தெரியாது! வயது ஆக ஆக மனிதன் அதிகமாக
நினைவலைகளில் மூழ்கத் தொடங்குகிறான். ஒரு தந்தையின் பார்வையில் தன் மகளைப் பற்றிய கதை! என்னை இவருக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை! என்னைப் போல பலரது உள்ளங்களையும் இந்தக் கதை கண்டிப்பாகத் தொட்டிருக்கும்.
//அவர் எனது பக்கத்தூர்க்காரர்தான். ஆனால் ஈழப்போர் சார்ந்து ஒரேஒரு கதை (சிறுகதை) மட்டுமே எழுதியுள்ளார். கேட்டால் போராட்டம் எனக்குப்பரிச்சயமில்லாதது என 'ரெக்னிக்கலாக' சொல்லி தப்புகிறார். //
ஒரு தனி மனிதர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? புரியவில்லை. இந்தியனாக நான், இவரை ஒரு
படைப்பாளியாகத்தான் பார்க்க முடிகிறது:(
//..ஒரு தனி மனிதர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?...//
அதுதான் சொன்னேனே இலக்கியம், உலகத்தரம் , பின்நவீனத்துவம் என்று பம்மாத்துக்காட்டாமல் ஈழத்தவனாக ஈழவிடுதலை நோக்கி பயணிக்க கேட்கிறேன்,
கவனிக்க ஈழத்தவனாகவே நின்று இறைஞ்சுகிறேன். உங்களுக்கு புரியாவிட்டால் வேதனைப்படுவது ஒன்றுதான் என்னிடமுண்டு.
/.. இந்தியனாக நான், இவரை ஒரு
படைப்பாளியாகத்தான் பார்க்க முடிகிறது:( ..//
ஏன் கொஞ்சம் முன்நகர்ந்து 'உலகத்தவனாக' அவரை ஒருபடைப்பாளியாக பாருங்களேன். இந்தியனாக ஏன் குறுகுகிறீர்கள். உலகத்தவனாக பார்க்கும்போது இன்னும் இனிக்கும்!
உங்கள் வேதனை எனக்குப் புரியவில்லை. அதனால் உங்கள் வேதனையை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று
அர்த்தமில்லை. இன்னும் உங்கள் வேதனையை அதிகமாக்காமல் விலகுகிறேன். இந்தியத் தமிழர்கள் எவ்வாறு உதவ
முடியுமென்று தெரியவில்லை. மறுபடியும் சொல்கிறேன். உங்களை வார்த்தையால் வேதனைப் படுத்தும் எண்ணம்
எனக்கு சிறிதளவும் கிடையாது.
//..ஈழம் என்பது உங்கள் பிரச்னையா இல்லை எங்கள் பிரச்னையா? ரொம்பவே அதிகாரம் செய்கிறீர்களே!!
உங்கள் போராட்டம் நீங்கள்தானே செய்ய வேண்டும்.
அதுதானே முறை?..//
உண்மைதான்.
முதலாளி விவசாயியைப்பார்த்து 'நன்றாகப் பயிர் செய்கிறாய், என் பசி தணிந்து விட்டது' என்கிறான்.
அவனோ 'ஐயா என்மனைவி மக்கள் வீட்டில் தனியே துணையில்லாமல் விட்டிருக்கிறேன் கற்பழிக்கப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள்' எனும்போது அவன் சொல்கிறான் "உன் பிரச்னையா இல்லை என் பிரச்னையா? ரொம்பவே அதிகாரம் செய்கிறாயே
உன் போராட்டம் நீதானே செய்ய வேண்டும்.
அதுதானே முறை?"
என்பது போல் இருக்கிறது.
தமிழுக்கு என்றுவரும்போது பாராட்டும் தமிழனுக்கு என்றுவரும்போது பாராமுகமும் தான் உறுத்துகிறது.
வெறுமனே ஈழப்போராட்டம் என்பது சிங்கள அரசினை மட்டும் மையப்படுத்தி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகத் தவறானது. அதை மட்டும் எதிர்த்துப் போராடி தமிழரின் அடையாளங்களையும், மொழியையும், கல்வியையும் இழந்து தவிப்பது என்பது சரியான ஒன்றல்ல.
நாட்டை மட்டும் பெற்றுக் கொண்டு அடுத்த சந்ததியினர் ஆங்கிலத்திவோ, அல்லது பிரஞ்சிலோ உரையாடுவது என்பது இவ்வளவு காலப் போராட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்யும். எனவே புலத்தில் மொழியழிவு வரக் கூடாது என்பதற்காகவும் போராட வேண்டியிருக்கின்றது.
ஃஃஃupdating என்றால் பொருள் இற்றைப்படுத்துதல்.ஃஃஃ
மேம்படுத்தல் என்றும் சொல்லலாம்.
மேம்படுத்தல் என்றும் சொல்லலாம்.
it is upgrading
ஹ்ம்ம்ம்... என்னத்தை சொல்ல?
இதப் பத்தி என்னோட புலம்பல்கள் ... கீழே..
http://thanjavuraan.blogspot.com/2007/07/blog-post.html
Post a Comment
<< Home