பசுமைக் குடில் விளைவு! (GREENHOUSE EFFECT)
பல ஊடகங்களில் தற்பொழுது, "பூமி வெப்பம் அதிகரிக்கிறது", "கால நிலை மாற்றம்", "பனிக்கட்டிகள் உருகுகின்றன" என்பது போன்று தலைப்பிட்டு செய்திகளை படித்து / பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதன் நடுவே, இதில் அரசியல் வேறு உள்ளே புகுந்துவிட்டது. அதனால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் கேள்விக் குறியாகி உள்ளது.
சரி, இந்த இடுக்கை அதைப் பற்றி எல்லாம் பேசப் போவதில்லை.
இதில் நான் எடுத்துக் கொண்ட விடயம், பசுமைக் குடில் விளைவு!. இந்த வார்த்தையை பல இடங்களில் கேட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு எளிய தமிழில் விளக்கம் பெறுவது என்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால், இந்த "பசுமைக் குடில் விளைவு" என்றால் என்ன? அதன் விளைவு என்ன?!, என்று இதைப் பற்றி நான் அறிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
குளிர் பிரதேசங்களில் (ஊட்டி) சில செடிகளை வளர்க்க ஒரு கண்ணாடி அறையை வைத்து அதில் வளர்ப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது எதற்கு?
அதாவது பகலில் ஏற்படும் வெப்பம், இரவில் இல்லாமல் போய்விடும். இதனால் அந்த செடிகள் பயனற்றுப் போகும். இதை தடுக்கத்தான் இந்த கண்ணாடிக் குடில்.
அறைக்குள் பகலில் கண்ணாடி வழியே வரும் வெப்பம், இரவில் மிதமான வெப்ப நிலை நிலவ, உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாமல் தடுத்து கண்ணாடிகள் காக்கின்றன. இதனால் அந்த செடிகள் தொடர்ந்து வளர முடியும். இது தான் பசுமைக் குடில் விளைவு என்கிறோம்.
சரி, இதற்கும் பூமிக்கும் என்ன சம்பந்தம்?
அதாவது, பூமியும் இது போலத்தான். பகலில் எற்படும் வெப்பம் இரவில் இல்லாமல் போவதைத் தடுக்க, இந்த கண்ணாடிகள் போன்று, சில வாயுக்கள் செயல்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால், பூமியில் அதிக வெப்பம் அல்லது அதிக குளிர், இவை இரண்டையும் இந்த வாயுக்கள் தடுக்கின்றன. அந்த வாயுக்களுக்குப் பெயர்தான், பசுமைக் குடில் வாயுக்கள்.
அந்த வாயுக்கள் யாவை?: நீர் ஆவி, கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் ஓசோன் (O3).
இதெல்லாம் சரி, இப்ப அதற்கு என்ன பங்கம் வந்துவிட்டது.?
அதாவது, இந்த கரியமில வாயு நாம் சுவாசிக்கும் போதும், மரங்கள் மூலமும், வாகணங்களில் பயன்படுத்தப் படும் எண்ணெய் (பெட்ரோல். டீசல்) மூலமும், அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப் படும் நிலக்கரி மூலமும், இந்த வாயுவின் இருப்பு நம் பூமியில் அதிகமாகிறது. இதில் முக்கிய காரணி என கருத்துப்படுவது வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுதான். (கார்பன் மோனோ அக்ஸைடு). நமது குளிர்சாதனப் பெட்டிகளும் கனிசமான வாயுக்களை வெளியிடுகிறது.
சரி, இந்த வாயு அதிகமாவதால் என்ன பிரச்சனை?
அதாவது, இந்த வாயுக்கள் எவ்வாறு கவசம் போல் செயல் படுகிறதோ அதே போல் இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும் போது பூமி வழக்கத்தை விட அதிகமாக சூடாகிறது. இவ்வாறு அதிக சூடாவதால், "கால நிலை மாற்றங்கள்", "பனிக்கட்டி உருகுதல்", போன்றவைகள் நிகழ்கின்றன.
இப்ப அந்தப் படத்தை பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.
இப்ப, கிழே ஒரு செய்தி இருக்கிறது அதைப் படித்துப் பாருங்க.. இந்தப் பிரச்சனையின் (விளைவின்) தீவிரம் புரியும்.
இந்த செய்தி ஜீலை 30, 2007 - தினகரனில் வெளியானது.
பூமி வெப்பம் அதிகரிப்பால் புயல் அபாயம் 2 மடங்கு உயர்வு
வாஷிங்டன், ஜூலை 30-
புவியின் வெப்பநிலை அதிகரிப்பால், அட்லான்டிக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை கடந்த நூற்றாண்டைவிட இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலை மனிதர்கள் அதிகளவில் மாசுபடுத்துவதால் புவியின் வெப்பம் அதிகரித்துள்ளது.
"இதன் காரணமாக கடலில் உருவாகும் புயல்களும் அதிகரித்துள்ளது" என அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர் ஹோ லண்ட், பீட்டர் ஜே.வெப்ஸ்டர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 1905ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை அட்லான்டிக் கடலில் ஆண்டு சராசரியாக 6 புயல்கள் உருவாகியது. இதில் 4 சூறாவளி.
கடந்த 1931ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டு வரை சராசரியாக 10 புயலும், 5 சூறாவளியும் உருவாகியது. 1995 முதல் 2005ம் ஆண்டு வரை சராசரியாக 15 புயலும், 8 சூறாவளியும் உருவாகியது. கடந்த 2006ம் ஆண்டில் 10 புயல்கள் உருவாகியுள்ளன.
இப்படி புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் அட்லான்டிக் கடல் மட்டத்தின் வெப்பம் 1.3 டிகரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. கடல்மட்டத்தின் வெப்பம் அதிகரிப்பதால், காற்று மண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு புயல்கள் உருவாகிறது.
அட்லான்டிக் கடலில் அடிக்கடி உருவாகும் புயலால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதோடு வர்த்தகமும் பெருமளவில் பாதிப்படைகிறது.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த "சுட்டியையும்" சென்று பாருங்கள்.
It is thought that over 13,000 sq km of sea ice in the Antarctic Peninsula has been lost over the last 50 years.
கொஞ்சம் "இங்கேயும் சென்று"பார்த்துவிடுங்கள். பசுமைக் குடில் விளைவை கேரபிக்கல் முறையில் விளக்கு உள்ளனர்.
"இங்கே"இன்னும் 90 ஆண்டுகளில் பூமி எவ்வாறு இருக்கும் என்று படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள். இது போல் ஏராளமான சுட்டிகளைத் தரலாம்.
சரி, இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
உண்மையில் தற்பொழுது பூமியை ஆள்பவன் மனிதன் தான். பூமியின் வரலாற்றில் இது முக்கியமான காலம். ஆனால், நம்மால்தான் இந்த பூமி அழிவை நோக்கி செல்கிறது என்றால், பரிணாம சுழற்சியில் மனிதன் என்ற ஒரு விலங்கு உருவாகமால் போயிருக்கலாம், என்று தோன்றுகிறது. இத்தகைய மனிதன் இல்லாமல் இருந்திருந்தால், மற்ற மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கும். நாம் செய்யும் செயல்களால் நம்மோடு சேர்ந்து இவைகளும் பாதிக்கப்படுவது, கொடுமை.
ஆக, இந்த பசுமைக் குடில் விளைவைக் குறைக்க மனிதனால் மட்டுமே முடியும். எப்படி என்றால், முடிந்தவரை இந்த வாயுக்களின் அளவை பூமியில் அதிகரிக்காமல் இருப்பதுதான்.
ஐநா மற்றும் உலக நாடுகள் பல மாநாடுகளை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதன் தீவிரம் இன்னும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடையவில்லை. அவ்வாறு சென்றடையாவிட்டால் இதன் விளைவை குறைப்பது மிகக் கடினம்.
நாளைய சந்ததியினரை நினைத்து இப்போதே செயல் படவேண்டும்!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
நன்றி!
அன்புடன்
சிவபாலன்
23 Comments:
//இப்படி புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் அட்லான்டிக் கடல் மட்டத்தின் வெப்பம் 1.3 டிகரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. கடல்மட்டத்தின் வெப்பம் அதிகரிப்பதால், காற்று மண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு புயல்கள் உருவாகிறது. //
சிபா,
யாரோ செய்கிறதவறுக்கு நாகை பகுதியையே புயல் தாக்குகிறது.
உங்கள் இடுகை சுற்றுச்சூழல் குறித்து ஒரு தெளிவான புரிதலை எனக்கு தந்தது
மிக்க நன்றி! GK.
இதில் இன்னுமொரு முக்கியமான விடயம், அடுத்த 90 ஆண்டுகளில் புவியின் வெப்பம் எவ்வளவு மோசமாக மாறும் என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. இதில் அதிகம் பாதிபுக்கு உள்ளாகப் போவது ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க கண்டம் தான். பாவம் அவர்கள்.ம்ம்ம்ம்..
good one sivabalan.
உங்களப் கும்மிப் பதிவர் 2007 க்கு பரிந்துரை செஞ்சது, கொடுமை.
உங்கள் பரிந்துரையை தூக்கி விடுகிறேன்.
சர்வேசன்,
மிக்க நன்றி!
முடிந்ததை செய்து அடுத்த தலைமுறை வாழ ஏற்ற இடமாக விட்டுச்செல்வோம்.
nagoreismail has left a new comment
எதிர்கால சந்ததிகளுக்கு சொத்து, நகை எல்லாம் சேர்த்து வைப்பதில் தான் என் கவனம் இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் வாழ்வதற்கு நல்ல சூழ்நிலையை அமைத்து கொடுக்க வில்லை என்றால் என்ன இருந்து என்ன பயன்..? நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்
யோகன் பாரிஸ்(Johan-Paris) has left a new comment
எளிமையான விளக்கம்!
என்ன செய்யப் போகிறோம். மாலைதீவு இல்லாமல் போய்விடுமாமே!!
பல மனிதர் வாழும் நிலங்கள் பாலைவனமாகிவிடுமாம்.
இத்தனைக்கும் நாம் தான் காரணம் என்பது வெட்கப்பட வேண்டியது.
Thekkikattan|தெகா has left a new comment
சிவா,
அருமையா விளக்கியிருக்கிறீர்கள். நன்றி!
இதற்கு மேல் ஒருவர் "பசுமைக் குடில் விளைவு" பற்றி இன்னமும் தெளிவுடன் எழுத வேண்டி வராத அளவிற்கு உள்வாங்கி எழுதப்பட்டுள்ளது இக் கட்டுரை. இதனையே நிறந்தர சுட்டியாக மற்ற இடங்களில் பேசும் பொழுது கொடுத்து விடலாம்.
இந்த அரசியியலால்தான் கால தாமதம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. கை விரலை சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது அதன் வீரியத்தை முழு வீச்சில் நாம் அன்று அனுபவிதுக் கொண்டிருப்போம்.
இப்பொழுது நாட்டிற்கு நாடு பொருளாதார முன்னேற்றம் மட்டுமே அதி சிரத்தையாக முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. சில, நேரங்களில் என்னதான் கரடியாக கத்தினாலும், இதெல்லாம் கால சுழற்சியினால் பூமியில் நிகழ்வது. உடனே கடந்த கால "பனி யுகத்தை" உதராணமாக காட்டி சாக்குப் போக்குச் சொல்லி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக இங்கு மெர்க்குரி முற்கள் 100யையே தொட்டுக் கொண்டுள்ளது.
சிவபாலன் ,
நல்லப்பதிவு, பசுமை இல்ல விளைவுகள் பற்றி அடிக்கடி இப்போதெல்லம் ப்திவு வருவதை கான்கிறேன் இதுவே மக்களின் விழிப்புணர்ச்சி அதிகரித்துள்ளதற்கு அடையாளம்.
இந்த க்யோட்டோ ப்ரோட்டோகால் அதற்கு அமெரிக்கா போடும் முட்டுக்கட்டை , அதன் விளைவாக பசுமை இல்ல வாயு விற்பனை புள்ளி என ஒரு புதிய வியாபாரம் கூட நடக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் கிரீன் பீஸ் அமைப்பு குண்டு பல்ப் பயன்படுத்துவதால் புவி சூடாதல் அதிகம் ஆகிறது எனவே சிறிய குழல் விளக்குகளை பயன்படுத்த சொல்லி ஒரு இயக்கம் நடத்துகிறது!
பசுமை குடில் விளைவு என்றுற வார்த்தையை விட பச்சைவீட்டு விளைவு என்னும் வார்த்தையே சரியானது ..
என்ன சொல்லுறீங்க?
வடுவூர் குமார்,
ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்... அதே அதே..
கருத்துக்கு நன்றி!
நாகூர் இஸ்மாயில் ,
நீங்க சொல்வது மிகச் சரி! எதையை விட்டு செல்லனுமோ அதை முதலில் விட்டுசெல்லவேண்டும். நல்ல காற்று நல்ல சூழ்நிலைதான் முதலில். மற்ற எல்லாம் இரண்டாம் பட்சம்.
கருத்துக்கு நன்றி!
யோகன் அண்ணா,
உண்மையில் நம் சந்ததியினரை நினைத்து கவலையாக உள்ளது. பல இடங்கள் மனிதன் வாழ லாயக்கு அற்றுப் போகும் என்கிறார்கள். இப்பொழுதே இவ்வளவு சன்டை நடக்கிறது. அப்ப, என்ன நடக்கும் என் யோசித்துப் பார்த்தால், மனித இனத்தின் முடிவு வெகு தூரத்தில் இல்லை எனறு மற்றும் உணர முடிகிறது.
கருத்துக்கு நன்றி!
தெகா
சரியா சொன்னீங்க.. மாசுபடுதல் அதனால் சூடேற்றம்.. இது தவறு என்று சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால், மாசுபடுத்த எவருக்கும் உரிமை இல்லை.
மாசுபடுத்தாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது. இதை புரிந்துகொண்டால், அரசியலுக்கு அங்கே வேலையே இல்லை.
கருத்துக்கு மிக்க நன்றி!
வவ்வால்,
நல்லதொரு தகவலைப் பகிர்துகொண்டிருக்கிறீர்கள். ஆமாம், நானும் படித்தேன், குண்டு பல்பினால் அதிக சூடேட்டறம் நடை பெருகிறது. அதனால் அதை தடை செய்ய வேண்டும் எனற கோரிக்கை.
இதில் முரன் என்னவென்றால், அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப் படுவது இந்த குண்டு பல்ப் தான்..( இப்ப எங்க வீட்டில் எல்லாமே குண்டு பல்ப் தான். வாடகை வீடு, அதனால் நாம் ஒன்றும் செய்ய முடியாது)
என்னமோ..
கருத்துக்கு மிக்க நன்றி!
அனானி
பசுமைத்தான் சரி என எனக்கு தோன்றுகிறது.
நன்றி
நல்ல கட்டுரை சிவபாலன். எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். அறிவியல் தமிழ் செந்தில் குமரன், வவ்வால், இப்ப உங்கள் இடுகை இவற்றில் நன்கு வளர்கிறது.
ஒரு சிறு திருத்தம். கரியமில வாயுவை மரங்கள் பயன்படுத்தி அவற்றினை மீண்டும் பிராணவாயுவாக மாற்றித் தருகின்றன. நீங்கள் மரங்களும் கரியமில வாயு கூடுவதற்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறீர்கள். மரங்கள் மீத்தேன் கூடுவதற்குக் காரணம்; கரியமில வாயு கூட இல்லை. மீத்தேனும் ஒரு பசுமைக்குடில் வாயு என்பது சரி.
குமரன்
இரவில் மரங்கள் கரியமில வாயுக்களை வெளியிடுகிறது என்பது அறிந்ததே.. அதைத் தான் சொன்னேன். ஸ்டார்ச் தயாரிக்கும் போது தேவைப் படும்.
பாராடுக்கு மிக்க நன்றி!
இந்த செய்தி நம்ம வவ்வால் அவர்கள் குறிப்பிட்டது போல், இந்த இடுக்கைக்கு மிக அவசியம் என்பதால் தமிழ் முரசில் இருந்து அப்படியே கொடுத்துவிடுகிறேன். பிறகு ஒரு நாளில் இந்த இடுக்கையை பயன்படுத்துவோக்கு பயனளிக்கும் என்பதால். நன்றி!
இந்த செய்தி 16-08-07 அன்று தமிழ் முரசு மாலை நாளிழதலில் வெளியாகி இருந்தது.
----------
அரியானா மக்கள் அசத்தல் - குண்டு பல்புக்கு கல்தா! - மாதம் ரூ.9 கோடி மிச்சம்
சண்டிகர், ஆக. 16-
நாட்டில் குண்டு பல்பு ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம் அரியானாவில் உருவாகியுள்ளது. இதன்மூலம் அரியானா மின்துறைக்கு மாதம் ரூ.9 கோடி மிச்சமாகியிருக்கிறது.
குண்டு பல்பு எரியவிடுவதால், அதிக அளவு மின்சாரம் செலவாகிறது. அதிக வெப்பத்தையும் இது வெளியிடுவதால், சுற்றுப்புறம் வெப்பமாகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று கூறி, உலக அளவில் குண்டு பல்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குறைந்த மின்சக்தியிலேயே அதிக வெளிச்சம் தரும் ப்ளூரசன்ட் விளக்குகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் பிரசாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலத்தில் சிர்சா பகுதி மக்களின் கூட்டு முயற்சியில், அந்த மாவட்டத்தில் இருந்தே குண்டு பல்பு விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீடு, கடை, வணிக, வர்த்தக நிறுவனத்தில்கூட குண்டு பல்பு கிடையாது என்று நாட்டிலேயே குண்டு பல்பை ஒழித்த முதல் மாநிலமாக சிர்சா உருவாகியுள்ளது.
இதுபற்றி மின்துறை அதிகாரிகள் கூறுகையில், Ôகுண்டு பல்புக்கு விடை கொடுக்கப்பட்டதால் மக்களுக்கும் கரன்ட் பில் குறைவாகியுள்ளது. மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு 40 சதவீத அளவுக்கு மின்சார இழப்பு குறைந்துள்ளது.
இதனால், 60 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டு 9 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. மாநிலம் முழுவதும் இத்திட்டம் வந்தால், மாதத்துக்கு ரூ.180 கோடி மிச்சமாகும் என்றனர்.
சிவபாலன், நல்ல பதிவு. வருங்கால சந்ததியினருக்கு சொத்துக்களை விட்டுச் செல்வதை விட, பசுமையான மாசில்லாத பூமியை விட்டுச் செல்வதுதான் இப்போதைக்கு அவசியத் தேவை!
சிவபாலன்,
குண்டுபல்ப் விஷயத்தில் நம்மவர்களும் வேகம் காட்டியுள்ளார்களே. சற்றுமுன்னிலும் நீங்கள் போட்டுள்ளதை பார்த்தேன்.
ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பு என்பது ஒரு யூனிட் உற்பத்திக்கு சமம் , இதனால் அனல் மின்நிலையம் வெளியிடும் புகை அளவும் குறைகிறதல்லவா!
மேலும் மரங்கள் இரவில் கரியமில வாயு வெளியிடும் என்றாலும் அது கிரகிக்கும் கரியமில வாயுவின் அளவை விட குறைவே. எனவே மரங்களால் நன்மை தான்.
குமரன் சொன்னது போல் மரத்தால் மீத்தேன் வராது, சதுப்புனிலத்தில் அல்லது நெல்வயல்கள் மூலம் மீத்தேன் வரும். அதுவும் மிக குறைந்த அளவே!
கடுமையான புயல்கள் உருவாகும்: நாசா எச்சரிக்கை
வாஷிங்டன்: பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால் கடுமையான புயல்களும் சூறாவளிகளும் உருவாகும் அபாயம் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புயலுடன் கூடிய கன மழையும் பெய்யும்.
Post a Comment
<< Home