ஒரு ஜாலியான பதிவு- யாரையும் காயப்படுத்த அல்ல..
நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு.
மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது.
1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள்.
2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்டுவதற்கு ஏதாவது இல்லாவிட்டால் நம்மால் சிந்திக்கவே முடியாது. நம்மை சிந்திக்கத் தூண்டும் புத்தகத்தை எழுதிய மனிதனுக்குக்கூட வேறு ஏதேனும் ஒன்று தூண்டுதலாக இருந்திருக்கும்.
3. மொத்தத்தில் கூட்டு சிந்தனையே அனைத்து தத்துவங்களுக்கும் காரணம்.
இந்த இடத்தில்தான் மொழியின் சிக்கல் விஸ்வரூபம் எடுக்கிறது. உதாரணமாக, "அம்மா" என்று ஒருவரை அழைக்கும்போதே மற்றவர்கள் யாரும் "அம்மா" இல்லை என்பதை உணர்த்துகிறோம். எதிர்பாலினத்தைக் காதலிப்பதாகச் சொல்லும்போதே, மற்றவர்களை வெறுக்கிறோம் என்பதை ஏற்கிறோம். ஒருவரை நேசிக்கும்போதே, அடுத்தவரை நேசிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில், ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை சுமந்துகொண்டே அலைகிறது.
4. இப்படி புனிதமாக நாம் நினைக்கும் எல்லாம் வெறும் புடலங்காய்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.
5. உண்மையில் தன்னைத் தவிர யாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.
6. அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே, அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பதுதான். மனதின் சந்தோஷமே அடுத்தவர் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது.
7. விலங்குகளின் இயல்பே மனிதனின் இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கும் போதுதான் குற்ற உணர்வுகளும் மன அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.
8. புனிதம் என்று காலம் காலமாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரும் விஷயம் காதல். உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்து வேறு எதுவுமே கிடையாது.
9. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓர் ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் சாயலாகக் காணும் ஆண், அவளைக் காதலிப்பதாக நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதைத் தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.
10. பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை பலரிடம் காண்பதுதான். அதனால்தான், அனுபவம் கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்துகொண்டே போகிறது; மாறிக்கொண்டே இருக்கிறது. மறுபாதியின் பிரதிபலிப்பைக் காணும்போதெல்லாம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறது. பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இப்போது காதலுக்காக வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இறந்து, ஆவணக் காப்பகங்களில் செல்லரித்துப் போயிருக்கின்றன.
11. இன்று சராசரியாக ஒவ்வொருவரும் பன்னிரெண்டு, பதிமூன்று வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். அது முதலே காதல் உணர்வு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அதனால்தான், இருபத்து மூன்று வயதுப் பெண்ணிடம் காதலிப்பதாக ஓர் ஆண் சொல்லும்போது அவள் சிரிக்கிறாள். அவளுக்குத் தெரியும், போகப் போக இன்னும் அதுபோன்ற பலரை தான் எதிர்கொள்ள நேரிடும் என்று!
12. ஒவ்வொருவரும் இன்று நேரில், போனில், இன்டர்நெட்டில் என்று எதிர் பாலினத்தைச் சேர்ந்த பலரிடம் தினமும் பேசுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். எதற்காகப் பேசுகிறோம், பழகுகிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாதது போல நடந்துகொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது ‘புனிதத்தைக் காப்பாற்றுகிறது.
13. உண்மையில் அன்றாடம் நாம் சந்திப்பவர்களில் நமது எதிர்காலத்துக்கு யார் உதவுவார்களோ அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்க மனம் அனுமதிக்கிறது.
14. இன்றைய தேதியில் திருமண மையங்களில் பதிவு செய்பவர்கள்கூட, இன்ன தகுதியுள்ள, இன்ன வேலை செய்யக்கூடிய வரன்தான் தேவை என்பதைத் தெளிவாகக் கேட்டுப் பெறுகிறார்கள். காதலிப்பதாக சொல்பவர்கள்கூட, சாதாரணமானவர்களைக் காதலிப்பதில்லை. தகுதியானவர்களை, தங்கள் எதிர்காலத்துக்கு பயன்படக் கூடியவரை மட்டுமே காதலிக்கிறார்கள்.
15. பரஸ்பர உதவிகளே காதலின் அடித்தளம். இந்தத் தகுதியும், பயனும் ஆறு போல ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் காதல் உறவும் நீடிக்கும். குட்டையைப் போல தேங்கிவிட்டால், சாக்கடையைப் போல உறவும் நாறி, பிரிவை நோக்கி நகர்ந்துவிடும்.
தோழமையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
16.தேவை அறிந்து உதவுபவன் மட்டுமே நண்பனாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான். உதவாதவன் விரோதி பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பான்.
இப்படி உதவுபவனும் சாகும் வரை உதவ வேண்டும். அப்போதுதான் அவன் உயிர் நண்பன்.
17. எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்போதுதான் சந்தோஷம் பிறக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அப்படியானால் சந்தோஷமும் துக்கமும்கூட கற்பிதம்தானே?
18. மனது ஏற்கும் விஷயம் சரியாகவும் ஏற்க அச்சப்படும் விஷயம் தவறாகவும் அர்த்தமாகும்போது, உணர்வுகளும் பொய்யாக அல்லவா போகிறது?
19. நன்றி, விசுவாசம், நேர்மை, நியாயம்... போன்ற வார்த்தைகள் புனிதமல்ல. ஒரு செயலைச் செய்ய அச்சப்படும்போது, நம்மை நாமே சமாதானப்படுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. அவ்வளவுதான்.
20. விசுவாசிகளை தலைவன்கூட நம்புவதில்லை. தலைவனைத் தவிர வேறு யாரையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை. இந்த விலங்கின் இயல்பை ஏற்றுக்கொண்டவன் புத்திசாலி. ஏற்கத் தயங்கி யோசிப்பவன் முட்டாள்!
21. இந்த சமூகத்தில் வேட்டையாடத் தெரிந்தவன் மட்டுமே வாழத் தகுதியானவன். வேட்டையாட அஞ்சுபவன், வேட்டையாடப்பட வேண்டியவன். நீங்கள் வேட்டையாட விரும்புகிறீர்களா? வேட்டையாடப்பட விரும்புகிறீர்களா? இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து உங்கள் எதிர்காலம் இருக்கும். ?
எது புனிதம் என்ற கட்டுரையில் திரு.கே. என். சிவராமன்
நன்றி: தினகரன்
27 Comments:
சக பதிவர்களே
இது யார் மனதையும் புன்படுத்த இப்பதிவிடவில்லை.
இப்பதிவின் கருத்துக்களை நான் எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை.
ஜாலியாக படித்துவிட்டு செல்லுங்க..
சிபா..!
எதிர்மறையான கருத்துக்கள் என்றாலும் ஒதுக்க முடியாத கருத்துக்களாக உள்ளது !
:-))
அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
உண்மையாகக் கூட இருக்கலாம்.
என் வீடு,என் மனைவி(கணவன்)
என் மக்கள் தானே.
துணையைத் தேர்ந்தெடுக்கும்போதும் அவர் எழுதி இருப்பது நிஜம்தான். அறுபதுகளில் அழகும்,சம்பளமும் பிரதானம். இப்போது அறிவு, படிப்பு, பதவி எல்லாம் பார்த்துதான் காதலோ கல்யாணமோ.
//பரஸ்பர உதவிகளே காதலின் அடித்தளம். இந்தத் தகுதியும், பயனும் ஆறு போல ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் காதல் உறவும் நீடிக்கும்//
இது சரி என்று தோன்றவில்லை. 'கோமா'வில் இருக்கும் மனைவியை காதலிக்கும் கணவனும், பக்கவாதத்தால் உணர்விழந்து கிடக்கும் கணவனை காதலிக்கும் மனைவியரும், இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
யோசிக்கும் குரங்கு செம க்யூட்!
விடுங்க விடுங்க.. சிவராமனுக்கு அன்னிக்கு என்ன பிரச்சனையோ!
சிவா,
யாருப்பா இத எழுதுனது. ஆமாம், மனிதனுக்கு எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் எந்த ஒரு வேலையும் செய்வதற்கு கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் ஏதோ ஒன்று கிடைக்ககப் போகிறது, என்ற ஒரு சின்ன எதிர்பார்ப்பில் காலச் சக்கரம் ஓடிச் செல்கிறது.
இருந்தாலும், எல்லா நிலையிலும் அது போன்ற ஒரு சூழல் நிகழ்வதாக நம்மால் எடுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற புத்தகங்களை எழுதுபவர்களுக்கு அவர் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பும் இதில் சிறிது அடிநாதத்தில் இருப்பதைக் காணலாம்.
#10 உண்மைதான். இப்பொழுது அது கொஞ்சம் அதிகமாகவே வெளிக்கொணரப்படுகிறட்து ;-)
சில வரிகள் சிந்திக்க வைக்கிறது. எல்லாமே அல்ல.
பெரியார் சொல்வது போல நிர்வாணமாக பார்த்தால் இதில் சிலது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கலாம்.
எல்லாத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்தாலே இந்த பிரச்சினைதான்.
ஜாலியா இருந்தது!
படிப்பதற்கு!
அவ்வளவே!
பொன்ஸ் சரியாச் சொல்லி இருக்காங்க!
GK,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
வருகைக்கு நன்றி
குமரன் சார்
இதற்கு பெயர்தான் தெய்வீக சிரிப்பா!!??
வருகைக்கு மிக்க நன்றி
ரெம்ப நல்ல கருத்துக்கள். இதைப்போய் 'ஜாலியா'ன்னு போட்டுட்டீங்களே?
மாற்று கருத்துக்களை வெறுப்புப் பார்வையிலேயே பார்த்துப் பழகிக்கொண்டோம். இது உண்மையாய் இருக்க குறைந்த பட்ச சாத்தியங்கள் இருப்பதாய்கூட நாம் நினைப்பதில்லை.
நாம் நம்புவதுதான் மெய் என நினைக்கிறோம்...இதை சில பின்னூட்டங்களில் காண முடிகிறது...
ஈகோ என்றும் இதைச் சொல்லலாம்.
இந்தப் பின்னூட்டங்கள் பதிவிலுள்ள சில கருத்துக்களை மெய்ப்பிக்கின்றன.
மனிதன் விலங்குதான் எனும் கருத்தை முற்றிலுமாக மறுக்க இயலுமா?
நாகரிகம் இல்லாமல் ஆப்ரிக்க காட்டுக்குள்ளே, ஆஸ்த்திரேலியாவிலே இன்னும் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். நாமக்கு நம்மைச் சுற்றியுள்ள உலகம்தான் தெரிகிறது புரிகிறது..
பதிவு அருமை. தலைப்பை சீரியசா வைத்திருக்கலாம். புது கருத்துக்கள் புண்படுத்தத்தான் செய்யும் புது செருப்பு மாதிரி.
//புது கருத்துக்கள் புண்படுத்தத்தான் செய்யும் புது செருப்பு மாதிரி.
//
I Second this part only....
சிவபாலன்
எதிர்மறைக் கருத்துக்களாக இருப்பினும், மனதின் ஓரத்தில் சிந்தனையைத் தூண்டுவதும் நல்லது தானே! அந்த விழிப்பு உணர்வாவது இருக்கும் அல்லவா?
//புது கருத்துக்கள் புண்படுத்தத்தான் செய்யும் புது செருப்பு மாதிரி//
முற்றிலும் உண்மை; ஆனால் அந்தப் புண் காலையே வெட்டும் அளவுக்குப் போய்விடக் கூடாது என்பது தான் நம்மில் பலரின் உண்மையான ஆதங்கமும் கூட!
திரு.கே.என்.சிவராமன் சொன்ன ஆயிரம் வார்த்தைகளை விடத் தாங்கள் போட்டுள்ள ஒரு படம், பல்லாயிரம் வார்த்தகளை வெளிப்படுத்துகினறது. அந்தக் குரங்கின் முகத்தில் இருப்பது சோகமா? ஏளனமா?? மீண்டும் மீண்டும் பார்த்து விட்டேன் :-))
மேளும் சில வரிகள். இதனைச் சார்ந்தே... மீண்டும் ஒரு முறை படிக்கும் பொழுது எனக்கு ஒஷோவின் எழுத்துக்களின் தாக்கம் இதில் இருப்பதை உணர முடிந்தது.
மனிதனின் மனப் பிளவுற்ற தன்மையினை (daulity nature) அவர் மிக அழகாக பல சூழல்களில் எவ்வாறு நம்மிடத்தே காணலாம் என்பதனை, பல அடுக்குகள் கொண்டு விளக்குவார். அதில் ஒன்று, நமது மனம் என்பது ஒரு கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது, அது வலதுதிலிருந்து இடது பக்கம் செல்வதற்கு, வலது பக்கம் நகரும் பொழுதே வேகத்தைக் கூட்டி இடது பக்கம் போவதற்கு ஆயத்தாம் ஆகிவிடுகிறது.
அது போலவே நமது மனமும் இந்த பிளவுத் தன்மையில் "நான் இதுவாக்கும்" என்ற தன்முனைப்பு தனத்தில் இருக்கும் பொழுது, தன்னை அதனுடன் தக்க வைத்துக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை மறுத்தல் வேண்டி மனதை குவிக்கும் பொழுது, மனமும் அந்த ஊசலைப் போல எந்த நிமிடத்திலும் அந்த எதிர்த் திசைக்கும் தாவிவிடலாமென்று சொல்வார்.
இதிலிருந்து என்ன சொல்ல வருவார் என்றால், திறந்த மனதுடன் என்றும் வளரும் நிலையில் தன்னை வைத்துக் கொண்டால், இந்த மனப் பிரழ்சியை சிறிது மட்டுப் படுத்தி வைத்துக் கொள்ள முடியுமென்று.
இந்த பிளவுத் தன்மையே (duality nature) இல்லாமல் எந்த மனிதன் அடுத்த நிலைக்கு தாவுகிறானோ, அவனையே முக் காலத்தையும் உணர்ந்தவன் என்று அழைக்கிறோம். அந்த இலக்கை அடைவது அவ்வளவு எளிதா என்ன...?
சிவபாலன் உங்களுடைய இந்த வரிகள்
//5. உண்மையில் தன்னைத் தவிர யாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.//
இந்த வரிகள் நான் பல வருடங்கள் முன் பார்த்த ஒரு ஆங்கில படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதில் ஒரு விளையாட்டரங்கில் குண்டு வெடித்து எல்லோரும் தப்பி ஓடும் பொழுது முதலில் கதையின் நாயகன் தப்பி பாதுகாப்பான இடத்துக்கு வந்த பிறகு தன் மனைவியை தேடுவான். பின் அவர்கள் இருவரும் அவர்கள் குழந்தைகளை தேடி கண்டு பிடிப்பார்கள்.
//8. புனிதம் என்று காலம் காலமாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரும் விஷயம் காதல். உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்து வேறு எதுவுமே கிடையாது. //
வசூல் ராஜா படத்தின் பாட்டில் கமல் சொல்வது இதைத்தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை.
இன்னும் எல்லாமே உண்மைதான் என்றாலும் தினசரி வாழ்க்கைக்கு இதை ஒத்துக்கொள்வது நடைமுறைக்கு ஒவ்வாது என்பதால்தான் பாரதியார் நிற்பதுவே நடப்பதுவே எல்லாம் மாயை என்று பாடினாலும் பின்னொரு கட்டுரையில் சம்சாரி அதைச் சொல்வது தவறு என்று சொல்கிறார்.
வல்லிசிம்ஹன் மேடம்
சரியாக சொன்னீர்கள்.. இன்று எல்லாம் பார்த்துதான் காதல் வருகிறது (சில் விடுபட்டவை உண்டு)
உங்கள் தைரியமான கருத்துக்குக்களுக்கு பாராட்டுகள்.
வருகைக்கு மிக்க நன்றி
Bad News India,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
வருகைக்கு நன்றி
பொன்ஸ்
படத்தைப் பார்த்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.
உங்கள் கமென்ட்டை மிகவும் இரசித்தேன்..
வருகைக்கு மிக்க நன்றி
வைசா,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
வருகைக்கு நன்றி
தெகா,
:)
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
வருகைக்கு நன்றி
தம்பி
மிகச் சரியாக சொன்னீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
SK அய்யா
ஜாலியாக இருந்ததா!!??
சந்தோசம்...
வருகைக்கு மிக்க நன்றி
சிறில்
உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்..
அருமையான பின்னூடம்.. தைரியமாக கருத்தை சொன்னதற்கு நன்றி.
உண்மையில் எனக்கு என்னுடைய பதிவில் உங்களை போல் தைரியமாக் பேச முடியவில்லை..
// மாற்று கருத்துக்களை வெறுப்புப் பார்வையிலேயே பார்த்துப் பழகிக்கொண்டோம். இது உண்மையாய் இருக்க குறைந்த பட்ச சாத்தியங்கள் இருப்பதாய்கூட நாம் நினைப்பதில்லை. //
சரியாக சொன்னீர்கள்
// மனிதன் விலங்குதான் எனும் கருத்தை முற்றிலுமாக மறுக்க இயலுமா? //
நல்ல கேள்வி
// தலைப்பை சீரியசா வைத்திருக்கலாம் //
சீரியசாக வைத்திருந்தால் நிறைய பேருக்கு போய் சேராமல் போய்விடும் என்ற எண்ணத்தில் ஜாலியாக போட வேண்டியதாயிற்று. உங்கள் ஆதங்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//விசுவாசிகளை தலைவன்கூட நம்புவதில்லை. தலைவனைத் தவிர வேறு யாரையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை. இந்த விலங்கின் இயல்பை ஏற்றுக்கொண்டவன் புத்திசாலி. ஏற்கத் தயங்கி யோசிப்பவன் முட்டாள்!//
:-))
குப்புசாமி செல்லமுத்து,
Ha Ha Ha..
எனக்கும் அந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தது...
வருகைக்கு நன்றி.
இந்த இலக்கை அடைவது அவ்வளவு எளிதா என்ன, சராசரி மனித நிலையில்.. சுருக் கென்று ஆய்வுகள். ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அப்படியே வாழ்ந்துப் பழகியாச்சு.
நீங்க ஒரு பெரிய உளவியல் நிபுணரோ!?
அருமையான பதிவு.
ஸ்ரீவிஜி..
Post a Comment
<< Home