Wednesday, October 25, 2006

அமெரிக்காவில் கவலை ரேகை...


வாய்ப்புகளை வாரி வழங்கும் பூமி. கல்வியில், தொழில்நுட்பத்தில், அறிவியலில் அமெரிக்காவுக்கு இணையாக எதுவும் இல்லை' என்றுதான் அமெரிக்காவைப் பற்றி உலகம் முழுவதும் உள்ள கருத்து. அதிகார மையமாகவும் உலகப் பொருளாதாரத்தின் கேந்திரமாகவும் அமெரிக்கா வளர்ந்தது.

அமெரிக்கா என்ற அச்சை சுற்றியே உலகப் பொருளாதாரம் இயங்குகிறது. அப்படிப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது எப்படி இருக்கிறது?

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (சீனாவின் வளர்ச்சி 10 சதவீதத்துக்கும் மேல், இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது).

அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 4.6 சதவீதம்தான். இந்த ஆண்டு பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் எக்கச்சக்கமாக லாபம் சம்பாதித்துள்ளன. இதையெல்லாம் பார்த்தால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாகத் தோன்றும். ஆனால், அத்தகைய நம்பிக்கைக்கு இடமில்லை என்பதுதான் உண்மை.

1. அமெரிக்காவின் ஏற்றுமதியைவிட இறக்குமதி அளவு அதிகம். இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி கடந்த ஓராண்டில் மட்டும் 80,000 கோடி டாலர்.

2. சேமிப்பு என்பதே அமெரிக்க மக்களுக்கு மறந்துவிட்டது. அமெரிக்க மக்கள் கடந்த ஆண்டில் தாங்கள் சம்பாதித்ததைவிட 50,000 கோடி டாலர் அதிகமாக செலவிட்டுள்ளனர். வங்கிகளில் கடன் கிடைக்கிறது என்பதற்காக, வருமானத்தை மீறி பொருள்களை வாங்கிக் குவித்து வருகின்றனர்.

3. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படும் என்று அந்த நாட்டின் தலைமை வங்கியின் தலைவர் பால் வோல்கர் எச்சரித்திருக்கிறார்.

4. அமெரிக்க அரசும்கூட கடன்களை வாங்கிக் குவிக்கிறது.

5. பத்திரங்கள் வெளியீடு மூலமும் இதர வழிகளிலும் சராசரியாக தினமும் 300 கோடி டாலர்களை கடனாக வாங்கிக் கொண்டிருக்கிறதாம் அமெரிக்க அரசு.

6. இந்த கடன்களும் சேமிப்பே இல்லாத அமெரிக்க மக்களின் செலவுகளும்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தை 'செழிப்பானதாக' வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டு இருக்கிறது.

7. நிலைமையைச் சமாளிக்க, வட்டி விகிதத்தை அதிகரிப்பது பற்றியும் டாலர் மதிப்பைக் குறைப்பது பற்றியும் யோசிக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க அரசு தள்ளப்பட்டுள்ளது.

8. இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்குமானால், சர்வதேசப் பொருளாதாரத்தில் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

9. இராக்கில் நடந்துவரும் நிழல் யுத்தத்துக்கும் தீவிரவாதத்துக்கு எதிரான போரின் காரணமாக, வளர்ச்சிப் பணிகளுக்கான, சமூகப் பணிகளுக்கான ஒதுக்கீடு சுருங்கி வருகிறது. சுகாதாரம், கல்விக்கு செலவிடும் தொகை ஏற்கனவே குறைந்துவிட்டது.

10.நியூ ஆர்லியன்ஸ் நகரை காத்ரீனா புயல் தாக்கியபோதே, அமெரிக்கர்கள் தங்களைப் பற்றிக் கொண்டிருந்த கனவுகள் நொறுங்கிவிட்டன. நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பணத்தைத் திரட்ட அந்த நாட்டு அரசாங்கத்தால் முடியவில்லை. முறையான நிவாரணப் பணிகள் நடக்காததால், கொள்ளை, வன்முறைகள் வெடித்தன.

11. அமெரிக்காவின் இப்போதைய மக்கள்தொகை 30 கோடி. இவர்களில் 3.7 கோடி பேர் (12.7 சதவீதம்) வறுமையில் உள்ளனர். வளர்ந்த நாடுகள் எதிலும் இந்த அளவுக்கு வறுமை இல்லை.

12. இப்படி வறுமையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், கறுப்பினத்தவர்கள் அல்லது, ஸ்பானிக்ஸ் என்று அழைக்கப்படும் ஸ்பெயின் வம்சாவளியினர். இருப்பவர்கள், இல்லாதவர்கள் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதால், குற்றங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

13.ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளி, தொடர்ந்து உயர்ந்து வரும் பட்ஜெட் பற்றாக்குறை, வறுமை, மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை, அமெரிக்காவுக்கு வளமான எதிர்காலம் உண்டா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

14.இதனால், தங்கள் நாட்டின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

அமெரிக்கா என்ற கனவு தேசத்தின் இன்றைய நிலை பிரகாசமாக இல்லை.


"கனவு தேசத்தில் கவலை ரேகை" என்ற கட்டுரையில் திரு.ஆர்.உமாசங்கர்

நன்றி: தினகரன்

18 Comments:

Blogger Sivabalan said...

ஒரு சிறு குறிப்பு.

மேலே உள்ள படம் சிகாகோ நகரில் உள்ள மில்லேனியம் பார்க்கில் எடுத்தது.

நான் நானேதான் எடுத்தேன்...Hi Hi Hi

October 25, 2006 12:34 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல (பயம்காட்டும்) தகவல்கள்.

கவலை ரேகையை கணக்காய் படம்பிடித்திருப்பது சூப்பர்.

October 25, 2006 12:57 PM  
Blogger VSK said...

படம் நல்லா எடுத்திருக்கீங்க, சிபா!!

October 25, 2006 2:38 PM  
Blogger Sivabalan said...

சிறில்,

நானும் படித்துவிட்டு கொஞ்சம் பயந்துதான் விட்டேன்.

படத்தை பாராட்டியதற்கு மிக்க நன்றி.

அதில் சந்தோச முகம், சோக முகம் எல்லாம் படம் பிடித்தேன். அதில் ஒன்றுதான் இந்தப் படம்..

வருகைக்கு நன்றி

October 25, 2006 9:11 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிவபாலன்,
அதுல ஒரு விசேடம் பாருங்க, இது போல பயமுறுத்தும் தகவல்களை அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை!

இணையப் பக்கங்களோ இல்லை, வெளிநாட்டுப் பத்திரிகைகளோ (தினகரன்??:-)) தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தொலைக்காட்சி மற்றும் மீடியா கூட மேல் எழுந்தவாரியாகத் தான் அலசுகின்றன! ஏனோ?

படம் அருமை; மக்கள் அந்தப் பயத்தைப் பாத்தாங்களா? பாத்துச் சிரிச்சாங்களா? அதையும் படமாப் போடுங்க :-))

October 25, 2006 10:18 PM  
Blogger பூங்குழலி said...

///அமெரிக்கா என்ற கனவு தேசத்தின் இன்றைய நிலை பிரகாசமாக இல்லை.
///

அமெரிக்க நாட்டின் நிலையை, அமெரிக்கரைவிட நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

ம்ம்ம்....

October 26, 2006 12:07 AM  
Blogger பழூர் கார்த்தி said...

அமெரிக்காவின் பொருளாதாரம் ஏற்கனவே தடுமாற துவங்கியுள்ளது...

இந்நிலை நீடித்தால் கஷ்டம்தான்...

***

இனிமேலாவது ஊர் நாட்டாமை செய்வதை விட்டு விட்டு அமெரிக்கா தன் மக்களை, பொருளாதாரத்தை கவனிக்கலாம்..

October 26, 2006 1:26 AM  
Blogger Sivabalan said...

வைசா,

சரியாக சொன்னீர்கள். நிச்சயம் உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

வருகைக்கு நன்றி

October 26, 2006 7:43 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

வாழ்க அமெரிக்கா!! வாழ்க இந்திய தேசிய சிந்தனை!!!

வருகைக்கு நன்றி

October 26, 2006 8:41 AM  
Blogger குமரன் (Kumaran) said...

சிவபாலன். ஒரு நல்ல கட்டுரை. எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி. இதில் சொன்னவை எல்லாமே உண்மைகள். ஆனால் அவற்றின் மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

அமெரிக்கா என்ற அச்சைச் சுற்றியே உலகப் பொருளாதாரம் இயங்குகின்றது என்பது ஓரளவிற்கே உண்மை என்று தற்போது கூறுகிறார்கள். அண்மைக் கால (கடந்த ஐந்து ஆறு வருட கால) நிகழ்வுகளின் மூலம் பொருளியலாளர்கள் சொல்வதென்னவென்றால் அமெரிக்கப் பொருளாதாரமும் உலகின் மற்ற பெரிய பொருளாதாரங்களும் தங்களின் ஒன்றையொன்று சார்ந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்பது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இந்த வளர்ச்சி சதவீதத்தையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். என்னிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது; உங்களிடம் பத்து லட்ச ரூபாய் இருக்கிறது. நான் அந்த பத்தாயிரம் ரூபாயில் ஏதோ ஒரு சதவீதத்தை முதலீடு செய்து ஒரு மாதத்தில் என்னிடம் பத்தாயிரத்து நூறு ரூபாய் இருக்கிறது. என் வளர்ச்சி சதவீதம் 1%. நீங்கள் உங்களிடம் இருக்கும் பத்து லட்சத்தில் ஏதோ ஒரு சதவீதத்தை முதலீடு செய்து ஒரு மாதத்தில் உங்களிடம் பத்து லட்சத்து ஐந்தாயிரம் இருக்கிறது. உங்கள் வளர்ச்சி விகிதமோ 0.5% தான். நீங்களும் நானும் ஒரே அளவில் (ஒரே தொகையை) முதலீடு செய்திருந்தால் உண்மையில் உங்கள் வளர்ச்சி விகிதம் மிக மிக அதிகம். ஆனால் சதவீதத்தில் சொல்லும் போது எப்படி சொல்கிறோம்? அதே போல் தான் இரு நிறுவனங்களின் வளர்ச்சியைப் பற்றி சொல்லும் போதும் - வால் மார்ட் 2% வளர்வதும் டார்கெட் 20% வளர்வதும்; சதவீதத்தின் படி பார்த்தால் டார்கெட் வால்மார்ட்டை விட வளர்ந்தது போல் தோன்றும்; ஆனால் உண்மையில் வால்மார்ட்டின் 2% வளர்ச்சி டார்கெட்டின் 20% வளர்ச்சியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

October 26, 2006 9:18 AM  
Blogger குமரன் (Kumaran) said...

அமெரிக்காவின் வேலையில்லாதோர் எண்ணிக்கை 4.6 சதவீதம் என்றாலும் நீண்ட காலமாக வேலையில்லாதோர் சதவீதம் அமெரிக்காவில் இதனை விடக் குறைவாகத் தான் இருந்தது.

அமெரிக்காவின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதும் அப்படியே. மிக நீண்ட காலமாக அப்படித் தான் இருக்கிறது.

சேமிப்பின் முக்கியத்துவத்தை இப்போது பொருளாதார அறிஞர்கள் வலியுருத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் சொல்வது 10% - 20% சேமிப்பைத் தான். நம் நாட்டவர்கள் 50% வரை சேமிப்பில் ஈடுபடுவார்கள். இரண்டுமே பொருளாதாரத்திற்கு கேடு. இரண்டிலுமே நன்மை தீமைகள் உண்டு. அமெரிக்க முறையில் சேமிப்பு இல்லாததாலும் வரவுக்கு மீறிய செலவினாலும் மஞ்சப்பத்திரிக்கை கொடுத்துவிட்டு தெருவிற்கு வருவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இந்திய முறையில் சேமிப்பு இருந்தால் பணப்புழக்கம் இல்லாமல் பணமுடை ஏற்ப்பட்டு வளர்ச்சியே இல்லாமல் போய்விடும்.சிறந்தது நடுவழியான தேவையான அளவிற்கு (20% - 30%) சேமிப்பைச் செய்து வரவிற்கு அதிகமான செலவு செய்யாமல் இருப்பதே. அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்யும்.

1998 வருடம் நாம் அணுகுண்டு பரிசோதனை செய்தவுடன் அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததே அப்போது ஒரு மின்னஞ்சல் சுற்றிக் கொண்டிருந்தது. அதில் இதே கருத்தை வேறு விதமாகச் சொல்லியிருந்தார்கள். வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் தான் ஊருக்கு அனுப்பும் பணத்தில் குறைந்தது ஒரு சதவீதம் அதிகமாக அனுப்பவேண்டும்; அப்படி அதிகமாக அனுப்பப்படும் பணம் இந்தியாவில் இருக்கும் உறவினர்களால் உடனே செலவு செய்யப்பட வேண்டும்; இது நடந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்; அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எந்த விளைவையும் நம் நாட்டில் ஏற்படுத்தாது. எனக்குத் தெரிந்து பலர் இதனைச் செய்தோம். பயன் இருந்ததா என்று சொல்வது கடினம். ஆனால் நம் நாட்டில் அமெரிக்கப் பொருளாதார தடை எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

October 26, 2006 9:28 AM  
Blogger குமரன் (Kumaran) said...

அமெரிக்காவில் இருக்கும் வறுமையின் அளவினைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதென்னவோ உண்மை.

October 26, 2006 9:29 AM  
Blogger குமரன் (Kumaran) said...

சிவபாலன். தனிப்பதிவாக இடவேண்டியதை இங்கே பின்னூட்டமாகவே இட்டுவிட்டேன். ஹைஜாக் என்று சொல்ல மாட்டீர்கள் அல்லவா? :-))

October 26, 2006 9:30 AM  
Blogger Sivabalan said...

கண்ணபிரான் இரவி சங்கர்,

நல்லா தெளிவாக சொல்லியிருக்கீங்க..இதுமாதிரி விசயங்களை அலச ஊடகங்கள் நிச்சயம் தனி தைரியமே வேண்டும்.. :)

நிறைய படங்கள் எடுத்தேன்.. ஆனால் போடுவதற்கு தான் இடமில்லை.. :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

October 26, 2006 10:37 AM  
Blogger Sivabalan said...

பூங்குழலி,

சரியாகச் சொன்னீங்க.. நல்ல கமன்ட்..

வருகைக்கு நன்றி

October 26, 2006 10:58 AM  
Blogger Sivabalan said...

சோம்பேறி பையன்,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி

October 26, 2006 11:42 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

வளர்ச்சி விகத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் சொல்வதுபோல் அமெரிக்காவின் Resource வேறு இந்தியா சீனா Resource வேறு. உண்மைதான்.

ஆனால், பொருளாதார அடிப்படை கேள்வியை இங்கே வைத்துள்ளீர்கள். நல்ல கேள்வி. அதாவது வளர்ச்சி விகித ஒப்பீடு.

இதை யாரவது பொருளாதாராத்தை சார்ந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.

October 26, 2006 11:56 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

உங்கள் கடைசிப் பின்னூடத்தைப் பார்த்து..

பாதி அழுகை... பாதி சிரிப்பு.. Hi Hi Hi..

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

October 26, 2006 12:00 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv