Monday, October 30, 2006

உதயமாகட்டும் புதிய இந்தியா!


அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளைப் பார்க்கும்போதோ, அதைப் பற்றிப் படிக்கும்போதோ, நம்மவர்களுக்கு அந்த மாதிரி எல்லாம் நம் நாடு இல்லையே என்று! . வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் அந்த நாடுகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அந்த இன்னொரு முகத்தை அறிந்த இந்தியர் எவரும், தன் நாட்டைப் பற்றித் தாழ்வாக நினைக்க மாட்டார் என்பதுதான் நிஜம்.

வறுமை தாண்டவமாடும் பூமி... பாம்பாட்டிகள், குரங்காட்டிகள் நிறைந்த ஊர்... இந்தியர்கள் எல்லோரும் மூட நம்பிக்கைகளில் திளைப்பவர்கள்...

கோவணங்களைக் கட்டிக்கொண்டிருக்கும் பரதேசிகள் நிறைந்த ஊர்... வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுபவர்கள்...

இந்தியாவைப் பற்றி மேலைநாடுகளில் பெரும்பாலானவர்கள் இப்போதும் இப்படிதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இமேஜ் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருந்தாலும், பொதுவாக பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இந்தியாவை இன்னும் கேலிப் பார்வைதான் பார்க்கின்றன.

1. வளர்ந்த நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகம். சுதந்திரம் பெற்று 200 ஆண்டுகளைக் கடந்துவிட்ட அமெரிக்காவிலேயே இந்த நிலை!

2. இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடித்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வெளியேறி 59 ஆண்டுகள்தான் ஆகிறது. இந்த குறுகிய காலத்துக்குள்ளேயே இந்தியா நிறைய சாதித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

3. ஆனாலும், இந்தியா பற்றி பெரும்பாலான மேலைநாட்டு ஊடகங்கள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன. "தி இண்டிபெண்டன்ட்" பத்திரிகை சமீபத்தில் ஐரோப்பிய நாட்டைவிடவும் இந்தியா அதிக அளவில் கார்பன் போன்ற விஷ வாயுக்களை உற்பத்தி செய்கிறது என்று அந்தக் கட்டுரை சகட்டுமேனிக்குக் குற்றம் சுமத்தியது.

4. ஒரு விஷயத்தை அந்தப் பத்திரிகை மறந்துவிட்டது & அல்லது, மறைத்துவிட்டது. 110 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு தனி நாட்டுடனும் ஒப்பிட முடியாது; ஒப்பிடக் கூடாது. மாறாக, ஐரோப்பா கண்டம் முழுவதுடனும் ஒப்பிட வேண்டும்.

5. ஓர் அமெரிக்கர் உற்பத்தி செய்யும் கார்பன் டையாக்சைடு வாயுவின் அளவில் பத்தில் ஒரு பங்கைதான் ஓர் இந்தியர் சராசரியாக உற்பத்தி செய்கிறார் என்பதுதான் உண்மை.

6. அதே பத்திரிகை, சில நாள் கழித்து இன்னொரு கட்டுரை வெளியிட்டது. உலகின் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் அதிகரித்து வரும் மக்கள்தொகைதான் என்று குறிப்பிட்டு, அதற்காக இந்தியாவையும் சீனாவையும் குறைகூறியிருந்தது.

7. இந்தியாவின் மக்கள்தொகை அதிகம்தான் என்பதும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அதுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் இதுவா காரணம்? வெறும் எண்ணிக்கை அடிப்படையிலா நாடுகளை ஒப்பிடுவது?

8. இந்தியாவில் சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 336 பேர் வசிக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 246 பேர் வசிக்கிறார்கள். உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 137 பேர்தான் உள்ளனர்.

9. உலகில் உள்ள அத்தனை மக்களையும் அமெரிக்காவில் குடியேறச் செய்தாலும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 300 பேர் கூட இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது, உலகப் பிரச்னைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம்தான் காரணம் என்பதை எப்படி ஏற்க முடியும்?

10. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இந்தியாவின் செயல்பாடு பாராட்டும் வகையில்தான் இருக்கிறது. ஆனால், இதெல்லாம் அமெரிக்க, இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்திகளாக இடம் பெறுவதில்லை.

11. எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளில் இந்தியாவை எப்போதுமே முதலிடத்தில் வைத்துப் பார்க்கும் வழக்கம் மேற்கத்திய ஊடகங்களுக்கு உண்டு. ஆனால், 110 கோடி மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மிகக் குறைவு என்பதை அவை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.

12. இவ்வளவு மக்கள்தொகை இருந்தும், பல மொழி, பல இனம், பல கலாசாரம் என்று இருந்தும் இந்தியா என்ற ஒரு நாடு ஜனநாயக வழிமுறைகளில் இருந்து இன்னமும் விலகாமல் இருக்கிறதே! இதையும் மேற்கத்திய நாடுகள் அங்கீகரிப்பதில்லை.

13. வறுமையாகட்டும், சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஆகட்டும், சுகாதாரம் ஆகட்டும், எல்லா பிரச்னைகளுக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது பழி போட்டுவிட்டு, தப்பித்துக்கொள்வது என்பது வளர்ந்த நாடுகளின் வழக்கம் ஆகிவிட்டது.

14. தகவல் தொழில்நுட்பம், அணு ஆராய்ச்சி, வின்வெளி ஆய்வு போன்றவற்றில் வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்திருக்கிறது. நாம் இன்னமும் செய்ய வேண்டியதை மறந்துவிடக் கூடாது.

15. கிட்டத்தட்ட 30 கோடி இந்தியர்களுக்கு மூன்று வேளை உணவு என்பதே ஒரு கனவாக இருக்கிறது என்பது கொடுமை. இந்தியாவில் வறுமை எப்போது முற்றிலும் ஒழிக்கப்படுகிறதோ அப்போது ஒரு புதிய இந்தியா பிறக்கும்.


நன்றி: தினகரன்

27 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

இது நாணயத்தின் ஒரு பக்கம் தான். இதே புள்ளிவிவரங்களில் இந்தியாவின் பெருமையைக் கூறும் பல கட்டுரைகளை மேற்கத்திய பத்திரிக்கை உலகமும் ஊடகங்களும் தருகின்றன. படித்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன்.

ஒரு சாரார் செய்வதற்காக எல்லாரையும் குறை கூறுவதாக இருக்கிறது தினகரனில் வந்திருக்கும் கட்டுரை. இன்டிபெண்டன்ட் பத்திரிக்கை செய்ததற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. எப்படி இன்டிபெண்டன்ட் போன்ற பத்திரிக்கைகள் இந்தியாவைப் பற்றிய தவறான புரிதலை மேற்குலகிற்குத் தருகிறதோ அது போன்றே தினகரனில் வந்த இந்தக் கட்டுரை போன்ற கட்டுரைகள் மேற்குலகைப் பற்றிய தவறான புரிதலை இந்தியர்களிடம் ஏற்படுத்துகிறது. இரண்டுமே தவறு.

October 30, 2006 9:20 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

இந்தியாவை பாராட்டிய பத்திரிக்கைகளை நானும் பார்த்திருக்கிறேன். அவை எந்த வகையான விசயங்களை பாரட்டுகின்றன. அதிகமாக தகவல் தொழில் நுட்பத்தைதான். பிற விசயங்கள்?

என்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் அமெரிக்கர் ஒருவர், இந்தியா அடிப்படைவாதிகள் நிறைந்த நாடு? என கேள்வி எழுப்பினார். என்னால் முடிந்தவரை விளக்கினேன்.

இதை எதற்காக கூறுகின்றேன் என்றால், இந்தியாவைப் பற்றி பொதுவான எண்ண ஓட்டங்களை குறிப்பிடவே.

தினகரனில் வந்திருக்கும் இக்கட்டுரையும் அதைதான் எடுத்துக் கூற விரும்புகிறது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

October 30, 2006 9:50 AM  
Blogger குமரன் (Kumaran) said...

உண்மை சிவபாலன். எப்போதும் எதிர்மறை கருத்துகள் தீயெனப் பரவி நெடுநாள் மக்கள் மனதில் நிற்பது இயற்கையாக இருக்கிறது. மேலே சொன்னது போல் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டி அதனைப் பொதுமைபடுத்தும் போது நீங்கள் சொன்னது போன்ற கண்ணோட்டமே மக்கள் மனதில் நிற்கிறது. அதனால் தான் இரண்டு பக்கமும் நடப்பதை தவறென்று கூறினேன்.

1997ல் நியூஜெர்சியில் இருந்த போது நடந்த நிகழ்வு நினைவிற்கு வருகிறது. ஒரு முறை நானும் என் நண்பனும் காய்கறி வாங்குவதற்குச் சென்றிருந்தோம். பணம் செலுத்தும் போது அங்கிருந்த பெண் (காஷியர்) நாங்கள் இந்தியர் என்று தெரிந்தவுடன் அப்பாவியாக கண்கள் விரிய 'உங்கள் ஊரில் நிறைய யானைகள் உண்டா?' என்று கேட்டார். என் நண்பனோ கொஞ்சம் குறும்புக்காரன். உடனே 'ஆமாங்க. நெறைய யானை இருக்கு. எங்க வீட்டுலயே நாலு யானை இருக்கு. நானெல்லாம் பள்ளிகூடத்திற்கு யானை மேல ஏறித் தான் போனேன்'னு அடிச்சு விட்டான். அந்த பெண்ணும் அதை நம்பினாங்க. :-)

October 30, 2006 9:58 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

என்னமோ போங்க... இங்கே இவனுகளுக்கு நம்மைப் பற்றி புரியவைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

மீன்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

October 30, 2006 10:58 AM  
Blogger குமரன் (Kumaran) said...

இருபுறமும் இது கடினம் சிவபாலன். நான் இங்கே 9 வருடமாக இருக்கிறேன். இவர்களைப் பற்றி 1% கூட புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்வேன். அதை விடுங்கள். நம் நாட்டவர்களுக்குள்ளேயே ஒருவர் மற்றவரை எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறோம்? எல்லாம் ஒரு விட்டுக் கொடுத்தல் தானே. கணவன் மனைவியர் இடையிலேயே புரிதல் முழுமையாக ஆகாத போது வேற்று நாட்டவரிடம் அதனை முயல்வது வீணே. முடிந்த வரை அவர்களுக்குச் சொல்லுங்கள். முடிந்தவரை நாமும் அவர்களைப் பற்றி புரிந்து கொள்வோம். அவ்வளவு தான் செய்ய முடியும்.

மீன்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. ஹிஹி. நீங்க சொல்றதுக்கு முன்னால நானே சொல்லிக்கிட்டேன். :-)

October 30, 2006 11:12 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா...!
மிக நல்ல பதிவு. இந்திய வளர்ச்சி பற்றி தன்னம்பிக்கை ஊட்டும் சிறப்பான பதிவு !

October 30, 2006 11:19 AM  
Blogger Sivabalan said...

சடை அப்பா,

நல்லதொரு கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்..

நம் அனைவரின் விருப்பம் போல் உதயமாகட்டும் புதிய இந்தியா!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

October 30, 2006 11:48 AM  
Blogger Pot"tea" kadai said...

siva,

Ïncredible India" விளம்பரத்தைப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு சுற்றுலா சென்று வந்த நண்பனொருவன் கூறியது,
I am gonna sue the Indian government!

:-))

October 30, 2006 12:56 PM  
Blogger Amar said...

//ொதுவாக பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இந்தியாவை இன்னும் கேலிப் பார்வைதான் பார்க்கின்றன.
//

கண்டுக்காதீங்க.
நாம் வளர-வளர இத்தகைய பிரச்சாரம் அதிகமாகுமே ஒழிய குறையாது.

//இந்தியாவின் மக்கள்தொகை அதிகம்தான் என்பதும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அதுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. //

தவறு.

நாம் சரியாக மனித-வளங்களை பயன்படுத்தாமல் விட்டுவிட்டு அதை குறைசொல்லி பழகிவிட்டோம்.

மக்கள் தொகை பெருக்கம் ஒரு வகையில் நல்லது. நீண்ட விளக்கம் தேவைப்படும். For another day.

October 30, 2006 1:26 PM  
Blogger Thekkikattan|தெகா said...

13. சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது பழி போட்டுவிட்டு, தப்பித்துக்கொள்வது... :-)) இத நான் ஒப்புத்துகிட்டே ஆகணும். இதுக்காகவே நாம்ம ஊர்ல சில நண்பர்கள் இருக்கிறார்கள்.

நிதி உதவி பணக்காரங்க கொடுக்கிறாங்களே (அமெரிக்கா போன்ற) அப்படிங்கிறதுக்க, சொல்லி வைக்கணுமின்னு சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்...

இதெல்லாம் உலக அரசியல்ல சகஜமப்பா... அப்புறம் சிவா, நிறைய பேருக்கு அமெரிக்காவ தாண்டி மற்ற நாடுகள் இருக்குங்கிறதே, எப்பாவது அந்த நாட்டு மேல குண்டு போடும் பொழுதுதான் தெரிஞ்சுக்கிறாங்க :(

சி.என்.என், என்.பி.சி சொல்றதே தெய்வ வாக்கு. எத்தனை பேருக்கு தன்னார்வ தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்ற குப்பை சானல்களுக்கிடையே புதைந்து போயி கிடக்குங்கிறதே தெரியாம இருக்காங்க. அங்கே உண்மை மட்டுமே பேசப்படுகிறது.

அப்படி ஒரு சானல் டிஸ் நெட்வொர்க்கில் இருக்கிறது எண் கூட 9410. முயற்சி செய்து பாருங்க. இன்னும் நிறைய விசயம் கிடைக்கும்.

October 30, 2006 1:42 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

//இவர்களைப் பற்றி 1% கூட புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்வேன். //

ம்ம்ம்... என்னமோ போங்க..

//நீங்க சொல்றதுக்கு முன்னால நானே சொல்லிக்கிட்டேன்//

இதை இரசித்தேன். Ha Ha Ha

நன்றி

October 30, 2006 10:00 PM  
Blogger Sivabalan said...

GK,

பாராட்டுக்கு நன்றி. இது போன்ற கட்டுரைகளை வெளியிடும் தினகரனுக்கு பாராட்டுகள்.

வருகைக்கு நன்றி

October 30, 2006 10:02 PM  
Blogger BadNewsIndia said...

வெளியூரில் இருப்பவனுக்கு நம்ப bright side காட்ட மாட்றோம். அதுதான் பிரச்சனை.
நம்ம shyam benegal மாதிரி ஆளுங்க எடுக்கர படத்ததான் அவன் பாக்கறான்.
shyam benegal, meera nair எல்லாம் நம்ம ஊர்ல சட்ட இல்லாம சுத்தர பிச்சகாரன தான் காட்டறாங்க.

என்னத்த சொல்ல.

October 31, 2006 12:52 AM  
Blogger மாசிலா said...

//இந்தியாவின் மக்கள்தொகை அதிகம்தான் என்பதும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அதுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை.ன் மக்கள்தொகை அதிகம்தான் என்பதும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அதுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை.//

மிகவும் தவறான கூற்று. வீணாக மக்கள் தொகையின் மீது பழியை போட்டுவிட்டு நம் தவறு பொறுப்புகளிலிருந்து நழுவிக்கொள்வது அதி சுலபம். மக்கள் ஒரு சக்தியே. அதிகமாய் இருந்தால் அது ஒரு மகா சக்தியே.

இன்னும் சொல்லப்போனால், வரப்போகும் சில பத்தாண்டுகளில் இதே (அதிக)ஜனத்தொகை உதவியினால், பொருளாதாரத்தில் சீனாவை தாண்டி நிற்போம். அதிவேகமாக மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஈடுகொடுக்க நிறைய இளைஞர்களின் தேவையை பூர்த்திசெய்ய நாடு இப்பொதே தயாராய் இருக்கிறது. சீனாவின் ஒரு குடும்பம்-ஒரு பிள்ளை திட்டத்தினால், வரப்போகும் சில பத்தாண்டுகளில் இளைஞர்களுக்கு கடும் பற்றாக்குறையை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

எப்போதும் போல் ஒவ்வொரு குடும்பமும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளை பெற்றுக்கொள்வது இந்திய எதிகாலத்துக்கு நன்றே!

October 31, 2006 8:34 AM  
Blogger Sivabalan said...

Pot"tea" kadai,

நீங்கள் சொல்லவந்த கருத்தை நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும் சிந்திக்க வேண்டிய கருத்து.

வருகைக்கு நன்றி

October 31, 2006 9:08 AM  
Blogger Sivabalan said...

சமுத்திரா

மக்கள் தொகை பெருக்கத்தால் நன்மைகள் என நீங்கள் குறிப்பிடும் சில விசயங்கள் முக்கியமானவைதான். ஆனால் 30 கோடி மக்களின் வருமைக்கு என்ன காரணம் இருக்க முடியும்?

வருகைக்கு நன்றி

October 31, 2006 9:14 AM  
Blogger Sivabalan said...

தெகா

ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவுகள் பக்கம் வந்திருக்கிங்க.. வாங்க..

நீங்கள் சொல்ல வரும் கருத்து மிக முக்கியமானது. உண்மை பேசும் ஊடகங்களை ஆதிரிக்காமல் இருப்பதும் வருந்தக்கூடியதே.

வருகைக்கு நன்றி

October 31, 2006 9:18 AM  
Blogger Sivabalan said...

Bad News India,

ம்ம்ம்.. நம்ம ஆளுகளையும் பிரகாசமான பகுதிகளையும் காண்பிங்கன்னு சொல்லறீங்க.. கருத்து ஏற்புடையதுதான்..


வருகைக்கு நன்றி

October 31, 2006 9:22 AM  
Blogger மாசிலா said...

//ஆனால் 30 கோடி மக்களின் வருமைக்கு என்ன காரணம் இருக்க முடியும்?//
மண்ணையும் அதன் வளங்களையும் ஒரு சில குழுக்கல் மட்டும் தங்களுடைடைதென சொந்தமாக்கிகிகொண்டு நன்றாக அனுபவித்து, மற்றவர்களுடன் சரியான முறையில் பகிர்ந்து கொள்ள தவிறிவிட்டனர்.
இதுவே முக்கிய காரணம்.

October 31, 2006 9:23 AM  
Blogger Sivabalan said...

மாசிலா

நீங்கள் சொல்லும் இளைஞர்கள் விசயம் சற்று சிந்திக்க கூடியதே.. இது சம்பந்தமாக ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்க.. படிப்போம்..

மற்றபடி இந்த 5 குழந்தைகள் என்பது ஏழை வர்க்கத்திற்கும் சேர்த்தா சொல்லறீங்க?

வருகைக்கு நன்றி

October 31, 2006 9:29 AM  
Blogger Sivabalan said...

மாசிலா,

//மண்ணையும் அதன் வளங்களையும் ஒரு சில குழுக்கல் மட்டும் தங்களுடைடைதென சொந்தமாக்கிகிகொண்டு நன்றாக அனுபவித்து, மற்றவர்களுடன் சரியான முறையில் பகிர்ந்து கொள்ள தவிறிவிட்டனர்.
இதுவே முக்கிய காரணம். //


நீங்க சொல்வது சரி. ஆனால் இந்த நிலைமை சீரடைய வழிகள் என்னவாக இருக்க முடியும்? அதுவரை ஏழை வர்க்கம் மக்கள் தொகையில் என்ன நிலை எடுக்க முடியும்?

October 31, 2006 9:32 AM  
Blogger மாசிலா said...

மன்னிக்கவும் கைவசம் சுட்டிகள் எதுவும் இல்லை ஐயா. மேலும் அச்செய்தியை நான் படித்தது பிரஞ்ச் மொழியில்.
மொத்தத்தில் சொல்லப்போனால், இன்றைய மற்றும் நாளைய இந்தியாவின் சக்தி முழுதும் அதன் மக்களை நம்பித்தான் இருக்கிறது.

// இந்த 5 குழந்தைகள் என்பது ஏழை வர்க்கத்திற்கும் சேர்த்தா சொல்லறீங்க?//
மன்னிக்கவும் தேவை இல்லாத கேள்வி!

October 31, 2006 9:40 AM  
Blogger Sivabalan said...

மாசிலா

கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

வருகைக்கு நன்றி

October 31, 2006 9:46 AM  
Blogger மாசிலா said...

//ஆனால் இந்த நிலைமை சீரடைய வழிகள் என்னவாக இருக்க முடியும்? அதுவரை ஏழை வர்க்கம் மக்கள் தொகையில் என்ன நிலை எடுக்க முடியும்?//

பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. இன்னும் சில காலங்களில் எல்லாம் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். நாம் ஒவ்வொறுவரும் நம்மால் முடிந்ததை சமுதாயத்திற்கு செய்வோம். ஒளிமயமான எதிர்காலம் அனைவருக்கும் அமையும். நம் எதிர்வரும் தலைமுறைகள் நல்ல சூழ்நிலையில் வாழ வழி வகுப்போம்.

October 31, 2006 10:08 AM  
Blogger Sivabalan said...

மாசிலா,

நன்றி!

October 31, 2006 10:18 AM  
Blogger Nakkiran said...

சுமார் 65-70 கோடி மக்கள் 40 வயதிற்கும் குறைவானவர்கள்.. இது ஒரு மிகப்பெரிய பலம்... நாம் எப்பொழுதும் மக்கள் தொகையை பிரச்சனையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை ஒரு advantage ஆக எடுத்து யோசித்தால் மிகப்பெரிய பலன் நிச்சயம் உண்டு...

October 31, 2006 12:22 PM  
Blogger Sivabalan said...

நக்கீரன்,

மக்கள் தொகையை ஆதாயம் எனக் கொள்ளலாம். ஆனால் அது எந்தவிதத்தில்? எப்படி? ஏன்? எதுவரை? என்பது ஆராய வேண்டிய விசயம்.

மற்றபடி உங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.

வருகைக்கு நன்றி

October 31, 2006 12:56 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv