80 ஆயிரம் கோடி ரூபாய்
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ்நாட்டின் திட்ட மதிப்பீடு ரூ.80 ஆயிரம் கோடி என்று திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் கூறினார்.
முதல்-அமைச்சரும் மாநிலத் திட்டக்குழு தலைவருமான கருணாநிதியை, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் தலைமையில் உறுப்பினர்கள் சென்னை கோட்டையில் நேற்று மாலை சந்தித்து 11-வது ஐந்தாண்டு திட்ட அணுகுமுறை அறிக்கையை வழங்கினார்கள்.
பின்னர் பேராசிரியர் மு. நாகநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:-
10-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ்நாட்டின் திட்ட மதிப்பீடு 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் திட்ட மதிப்பீடு 70 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் சமூக நலத் துறைகளில் வளர்ந்து வரும் பொதுச்செலவுகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அதிக நிதியினை மத்திய அரசிடம் இருந்து பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் விவசாயத்தில் பெரிய தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த தேக்க நிலையை போக்க விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
விவசாயத்தை 50 சதவீத மக்கள் நம்பி வாழ்கிறார்கள். அதை லாபகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அரசு உதவிகள், விவசாயிகளுக்கு சந்தை தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பது, ஊரகப் பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள் அமைப்பது , ஆறுகளை இணைப்பது போன்ற நடவடிக்கை மூலம் விவசாயத்தை மேம்படுத்தலாம் என்று அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளோம்.
தகவல் தொழில் நுட்பத் துறையும், அதன் தொடர்புடைய மற்றத் துறைகளும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதல் சக்தியாக வளர்ந்து வருகின்றன. தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தொழிற் பயிற்சி பள்ளிகள், தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களில் புதிய பாடத்திட்டங்களையும், பயிற்சி முறைகளையும் கற்பிக்க வேண்டும்.
தனது வரி வருவாயை உயர்த்துவதற்காக சேவை வரி விதிக்கும் உரிமையை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
சமத்துவம் - திறன் நெறிமுறைகளுக்கு ஏற்ப மாநிலங்கள் நிதியினை பெறும் வண்ணம் மத்திய அரசு நிதி அளிக்கும் அமைப்பை மாற்றிட வேண்டும் என்று எங்கள் அறிக்கையில் கூறியுள்ளோம்.
இந்த அணுகுமுறை அறிக்கை விவாதத்துக்கு வைக்கப்படும். அடுத்து 6 மாதத்துக்கு பிறகு இறுதி அறிக்கையை சமர்ப்பிப்போம். இவ்வாறு பேராசிரியர் மு.நாகநாதன் கூறினார்.
2 Comments:
சிவபாலன்,
நல்ல தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுமைக்குமே,
ஒருபுறம் விளைநிலங்களை "சிறப்பு பொருளாதார மண்டலங்கள்" ஆக
மாற்றி விற்றுக் கொண்டு, மறுபுறம் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில்
விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாகச் சொல்லுவது முரண்பாடாக உள்ளது.
"விளைநிலங்களை இழப்பது நம் வாழ்வுரிமையை இழப்பதற்கு சமம்"
என்பதை மிகச் சீக்கிரமே நாம் உணர்வதுதான் நம் நாட்டிற்கு நல்லது!
அன்புடன்,
நம்பி.பா.
நம்பி.பா.,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. உண்மையில் குறு நில விவசாய்களின் நலம் காக்க இதுவரை நல்ல நடைமுறை திட்டம் இல்லை என்றுதான் கூறுவேன்.
இநத திட்டக் குழு விவாசய நலன்களை மையமாக கொண்டுடிருப்பது ஒரு வித்ததில் ஆறுதல் அவ்வளவே.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment
<< Home