"இந்தியா" - உயிர் காக்கும் காவலன் - பகுதி - 1
உயிர் காக்கும் மருந்துகளைத் தயார் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அவை எதிர்ப்பது இந்திய அரசின் காப்புரிமைச் சட்டங்களை. இந்த வழக்கில் நோவர்ட்டிஸ், கிளாக்ஸோ ஸ்மித்கிளைன், அப்போட் போன்ற பல நிறுவனங்களுக்கு எதிராக சர்வதேச மற்றும் இந்திய தொண்டு நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அது என்ன வழக்கு?
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் நோவர்ட்டிஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு க்ளீவாக் என்ற மருந்து. லுக்கேமியா மற்றும் வயிறு புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து இது. புற்றுநோயை தடுக்கும் இந்த ஒரு மருந்து மூலமே உலகம் முழுவதிலும் இருந்து 250 கோடி டாலர் (ரூ.11,250 கோடி) கிடைக்கிறது இந்த நிறுவனத்துக்கு. இந்த மருந்துக்குதான் காப்புரிமை கேட்டு அது வழக்காடுகிறது.
சீனா, ஆப்ரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் பெற்றுவிட்டது. இதனால் அங்கெல்லாம் இந்த மருந்தை வேறு யாரும் தயாரிக்க முடியாது. இந்தியாவிலும் இந்த மருந்தை மற்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யவிடாமல் தடுக்க, காப்புரிமை வழக்கு தொடர்ந்துள்ளது.
எந்தெந்த மருந்துகளுக்கு காப்புரிமை தரலாம், எதற்கெல்லாம் தரக் கூடாது என்பதற்கு இந்தியா சில விதிமுறைகளை பின்பற்றுகிறது. புதிய மூலக் கூறுகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகளுக்கு உடனடியாக காப்புரிமை கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் மூலக் கூறுகளில் சிறிய மாற்றங்கள் செய்து, அல்லது இருக்கும் மருந்துகளை கலந்து உருவாக்கும் மருந்துகளுக்கு காப்புரிமை தருவதில்லை என்ற விதிமுறையை கடைப்பிடிக்கிறது இந்தியா. இதைத்தான் எதிர்க்கிறது நோவர்ட்டிஸ்.
‘இதுபோன்ற விதிமுறைகளால், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடமில்லாமல் போய்விடும்‘ என வாதிடுகிறது. மேலும், எங்கள் மருந்தை இந்திய மருந்து நிறுவனங்கள் காப்பியடித்து உற்பத்தி செய்து உலகெங்கும் மலிவாக விற்பதால் எங்கள் லாபம் பாதிக்கப்படுகிறது. எனவே காப்புரிமை அளிக்க வேண்டும் என்கிறது.
இந்த விஷயத்தில் மருந்து கம்பெனிகளுக்கு எதிராகவும் இந்திய அரசின் நிலைக்கு ஆதரவாகவும் தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. காரணம், மருந்தின் விலை. நோவர்ட்டிஸ் தயாரிக்கும் க்ளிவெக் மருந்தை தொடர்ந்து ஓராண்டு வாங்கி பயன்படுத்தும் நோயாளிக்கு ஆகும் செலவு ரூ.14 லட்சம். ஆனால் இந்திய நிறுவனங்களின் இதே வகை மருந்துக்கு வெறும் ரூ.96 ஆயிரம்தான் ஆகிறது. எனவே “இந்த மருந்துக்காக நோவர்ட்டிஸ் காப்புரிமை பெற்றுவிட்டால், பணக்காரர்கள் மட்டுமே மருந்து வாங்க முடியும். ஏழைகள் சாக வேண்டியதுதான் என்கிறது எம்எஸ்எப் (மெடிசின்ஸ் சேன்ஸ் பிரான்டியர்ஸ் - எல்லைகள் இல்லாத மருந்துகள்) என்ற சேவை அமைப்பு.
9 Comments:
இது தினகரனில் வெளியான கட்டுரை. கட்டுரை பெரிதாக உள்ளதால் இரு பகுதிகளாக கொடுத்துள்ளேன்
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு கிடைக்கும் மலிவான மருந்துகளுக்கும் வேட்டுத்தானா?
அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.
வைசா
ரெண்டு பக்கமும் நியாயம் இருக்கறதாக தோணுது. காப்புரிமைன்னாலே தலைவலி தான் போலிருக்கு.
சிபா,
மறுகாலனியாதிக்கம் என்று பலர் எழுதுவது நினைவு வருகிறது !
வைசா
ஆம்.. இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நம் அரசுடையது.
இல்லை என்றால் ஏழைகள் சாக வேண்டியதுதான்..
அடுத்த பதிவை நாளை கொடுக்கிறேன்
வருகைக்கு நன்றி
மணிகண்டன்
இல்லைங்க.. புது மூலக்கூறுகளுக்குதான் காப்புரிமை என்ற இந்திய அரசின் நிலை சரியானதே!!
இரண்டாம் பாகம் படித்துவிட்டு கருத்தை சொல்லுங்க..
வருகைக்கு நன்றி
சிவா
நான் விரும்பி படிக்கும் ஒரு தலைப்பு இது...
TRIPS ஏற்படுத்தும் குழப்பத்தினால் இன்று, வளரும் நாடுகள் பல பொதுசுகாதார கொள்கைகளை முறைப்படுத்தவும், அமுல்படுத்தவும் பல சிக்கல்கள் சந்தித்து வருகிறது....காப்புரிமை இருக்கும் மருந்துகள் யாவும் பெரும்பாலும்
வளரும் நாடுகளில் அதிகம் தேவைப்படும் மருந்துகளாகத்தான் இருக்கிறது...
இதை தெளிவு படுத்த DOHA Declaration ஏற்படுத்தப் பட்டிருந்தாலும் இது பல அடிப்படை சிக்கல்கலை தீர்க்கவில்லை.. நாட்டுக்கு நாடு பொது சுகாதார தேவைகள், விதிகள், விளக்கங்கள் மாறும். அதற்கு ஏற்றவாறு தான் இந்த மருந்துகளின் தேவைகளும் மாறும்...
GK,
வருகைக்கு நன்றி!
இறுதி பகுதியையும் படிங்க..
மங்கை
வருகைக்கும் உங்கள் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இறுதி பகுதியையும் படித்துவிட்டு தங்கள் கருத்தை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Post a Comment
<< Home