Friday, August 17, 2007

இலங்கைத் தமிழர்கள் - நான் அறிந்தவை

நான் முதன் முதலில் இலங்கைத் தமிழர் பற்றி அறிந்தது அரசு பொருட்காட்சியில்தான். அப்ப எம்ஜிர் ஆட்சிக் காலம். எங்கு பார்த்தாலும் இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைகள் பற்றித்தான் பேச்சு. அப்ப எங்க ஊரில் பேசிகொள்பவர்கள் எல்லாம் சிங்களவர்கள் அரக்கர்கள் அதனால் இதயமில்லாமல் தமிழர்களை (மனிதர்களை) கொன்று குவிக்கிறார்கள் என. அந்த வயதில் அரக்கர்கள் இன்னும் உயிருடன் தான் இருகிறார்கள் என்று நம்பினோம். ஆகையால் அவர்களை அழிக்க கடவுள் முருகன் செல்ல வேண்டும் என்றெல்லாம் நண்பர்களுக்குள் பேசியிருக்கிறோம்.

அந்தப் பொருட்காட்சியில் நான் கண்ட காட்சி இன்னும் என் மனதில் வடுவாக உள்ளது. அந்த அரங்கில் கற்பினி பெண்களோ சிறுவர்களோ அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால் அவ்வளவு கொடுமையான இன்னல்களை விளக்கும் புகைப் படங்கள் அடங்கிய காட்சி அரங்கம் அது. இருப்பினும் எனது உறவினர் கொஞ்சம் பிரபலமானவர். அவர் பெயரைச் சொல்லி நாங்கள் உள்ளே சென்றோம்.

உள்ளே சென்றதும் ஏன்டா உள்ளே வந்தோம் என்று ஆகிவிட்டது. என்னால் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது அந்த கோர காட்சிகளை. உண்மையில் அந்த புகைப் படங்களைப் பார்த்தவர் எவரும் இலங்கைத் தமிழரின் மீது இரக்கம் கொள்வர்.

இது போன்ற சமயத்தில் எங்கள் வீட்டுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் வந்தது.


சில விசாரனைக்குப் பின் அவர்களை எங்கள் வீட்டில் தங்க அனுமதித்தோம். அந்த குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர்.

எல்லோரும் மிக நன்றாக பழகக் கூடியவர்கள். ஆனால் அவர்கள் ஏனோ இலங்கை விசயத்தை எப்போதும் பகிர்ந்தது கிடையாது. ஓரு வேளை அதீத சோகம் கூட காரணமாக இருக்கலாம்.

கிட்டதட்ட(முக்கியமாக தினத்தந்தி) எல்லா பத்திரிக்கைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் செய்திகளை வெளியிட்டன.

அப்ப எல்லோரும் எண்ணியது..இன்னும் ஒரு இரு மாதங்களுக்குள் இந்த இனப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான். எனென்றால் அவ்வளவு தீவிரமாக இருந்தது..ம்ம்ம்ம்ம்...
(ஆனால் இன்னும் இந்த இனப் பிரச்சனை நடக்கிறது என்றால்...சோகம்)


Tamil civilians face a dangerous journey to India


Here a refugee child eats a meal provided by the school within the camps


அந்த சமயத்தில், என்னுடைய கல்லூரி வகுப்பில் ஒரு மாணவன் வந்து சேர்ந்தான். அவன் இலங்கைத் தமிழர் அல்ல. இருப்பினும் இலங்கை விசயங்களை மிகத்தெளிவாக கூறுவான்.

இதற்கிடையில் ராஜீவ் காந்தி மரனம் இந்தியத் தமிழர் சிந்தனையை சற்று மாற்றியது. அதற்கு காங்கிரஸ் மேல் தமிழக மக்கள கொண்டிருந்த அன்பு கூட ஒரு காரணம். (அன்னை இந்திரா இறந்த போது அவருடைய திரு உருவம் பொருந்திய புகைப் படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்ல அடக்கம் செய்தனர்.. அவ்வளவு காங்கிரஸ் பாசம்) ஊடகங்கள் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

எனது கல்லூரி நண்பர் சொன்ன சில விடயங்கள், முக்கியமாக, அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியில் என்ன நடக்கிறது. அதே போல் கிழக்கில் என்ன நடக்கிறது என..

ஆனால் என்னால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது. இப்பொழுது ஓரளவு பரவாயில்லை..

சரி இப்ப எனக்குத் தெரிந்த விடங்கள் இலங்கைத் தமிழர் பற்றி

இதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். அதே போல் என்னைப் போன்றோர்கள், இலங்கை தமிழர் பற்றி ஓரளவு முழுமையாக அறிந்துகொள்ள ஏதேனும் சுட்டி இருந்தால் தரவும்.

1. இலங்கைத் தமிழர்கள் சுமார் 2000 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் உள்ளனர்.

2. முக்கியமாக இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் வாழ்கின்றனர்.

3. சிங்கள இனத்தவர் தமிழ் இனத்தின் மீது சிறுபான்மையினர் என்ற முறையில் அனைத்து வன் தாக்குதலையும் செய்கின்றனர்.

4. தமிழர் வாழும் இடங்களை அபகரித்துக் கொண்டு அங்கே சிங்களவர்களை குடியமர்த்தும் வேலையில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் தமிழர் இருப்பைக் குறைக்க முடியும் என நம்புகின்றனர்.

5. இலங்கைத் தமிழரில் பல பிரிவு உண்டு. முஸ்லிம்கள் உட்பட இன்னும் பிற.

6. இந்தியா சரியான பார்வையின் மூலம் இந்த இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கூறமுடியும். ஏனென்றால் பக்கத்தில் இருக்கும் பெரிய நாடு என்ற முறையில்.

7. ராஜீவ் இழப்பு பெரிய இழப்பு என்ற போதிலும், அருகில் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டுகொள்ளாலாமல் இருப்பது எனக்கு சரி என்று படவில்லை.

8. ஒரு ஆக்கப்பூர்வமான ஒப்பந்தம் இரு தரப்பிற்கும் பாதகமின்றி உருவாக்கப் படவேண்டும். அதில் நார்வே, இந்தியா பங்கு கொண்டு ஒரு உடன்பாடு ஏற்படுத்தலாம்..

ஏதாவது செய்யுங்க.. ப்ளீஸ்.. பாவம் எவ்வளவு பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது..

29 Comments:

Anonymous Anonymous said...

to solve tamil problems
first we have to eliminate ltte and then set very strong rules for SL Govt regarding tamils.
is it okie with you?
or you want to save ltte?

August 17, 2007 10:57 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா நானும் கூட நம் இலங்கை சொந்தங்களைக் குறித்து எழுதி வைத்திருக்கிறேன். நீங்களும் எழுதி இருக்கிறீர்கள் ஒத்த நிகழ்வு போல் இருக்கிறது.

நல்லது விரைவில் நடக்கட்டும்

August 17, 2007 10:58 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

அழியும் மக்கள்(தமிழ் இனத்தவர்) காகப்படவேண்டும்.. அது தான் என் வேண்டுகொள்..

நன்றி

August 17, 2007 11:04 AM  
Blogger சிவபாலன் said...

GK,

மகிழ்ச்சி! நல்லது நடக்கட்டும்!

மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு துனபங்களைத் தாங்கி வாழ வேண்டியுள்ளது. அதில் இது போன்ற இனப் பிரச்சனை எல்லாம் வேதனையின் உச்சம்.. நல்லது விரைவில் நடக்கட்டும்!

நன்றி!

August 17, 2007 11:07 AM  
Anonymous Anonymous said...

தமிழ் ஈழம் தோன்றவேண்டும், அவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைக்கவேண்டும். என்றைக்குமே மக்களுக்குள் பிரச்சனை வந்ததில்லை. ஆனால் அரசியல்வாதிகள் குழப்பும் குழப்புக்கு அவர்கள் ஆட்பட்டு அட்டூழயம் செய்வது உண்டு. ஆனால் இந்த பிரச்சனையில், சிங்களர்களின் அடிப்படை எண்ணம் மாறவேண்டும். அதிலும் புத்த பிக்குகள் என்று வேடம் தரித்து அடிக்கும் கூத்து சகிக்கவில்லை.

அன்புடன்,
அகல்யா.

August 17, 2007 11:18 AM  
Blogger சிவபாலன் said...

அனானி (அகல்யா)

கருத்துக்கு நன்றி!

August 17, 2007 11:23 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஒரு ஆக்கப்பூர்வமான ஒப்பந்தம் இரு தரப்பிற்கும் பாதகமின்றி உருவாக்கப் படவேண்டும். அதில் நார்வே, இந்தியா பங்கு கொண்டு ஒரு உடன்பாடு ஏற்படுத்தலாம்//

சிவபாலன் உணர்வுக்கு நன்றி!
நேற்று ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்,அரசியலை உன்னிப்பாய் கவனிப்பவர் தொலைபேசியில் கூறியது.'' இனி எங்கேயும் இருக்கவிடமாட்டான், வெளிக்கிட வேண்டியது தான்''- அதாவது அவர் கடைசிகாலம் இந்தியாவில் என 72 வயதில் முடிவெடுத்து விட்டார்.
எனவே இனியும் சேர்ந்து வாழ்தல் என்பது நடக்குமா??அதுவே என் கேள்வி...கொஞ்சம் இரக்க உணர்வு உள்ள சிங்கள மக்கள் கூட மாறிக் கொண்டு போவதால், பிரிவு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஆகவே நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் எது பிரித்துத் தர உதவப்போகிறது.
உதவுமா??
அதனால் அவர்கள் பெறும் லாபம் என்ன? இதைவிட ஈழம் வந்தால், தமிழகம் பிரியும் எனப் பூச்சாண்டி காட்டுவோர் சும்மா இருப்பார்களா??
என் சிற்றறிவுக் கெட்டியவரை நிறையக் கேள்விகள் உள்ளன.
அத்துடன் முழுத் தமிழர்களும் ஒற்றுமையுடனா? இருக்கிறார்கள்.
எனவே எல்லாமாக தமிழர்கள் நிலையை அகதியாகத் தான் ஆக்கிறது.
தமிழர் இரண்டாம் பிரஜை எனும் எண்ணம்
சிங்களவர்கள் மனதில் வேரூன்றி விட்டது.
அதனால் பாதிப்பற்ற ஆக்கபூர்வமான உரிமைப் பங்கீட்டுக்கு அவர்கள் ஒத்துவருவார்களா?
அப்படி ஒரு நிலை வர ஆயுத வியாபாரிகள் விடுவார்களா?
தலையைச் சுற்றுகிறது.

August 17, 2007 11:31 AM  
Anonymous Anonymous said...

1958 இல் தமிழருக்கு எதிரான வன்முறைக் கலவரம் வெடித்தது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பல தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். மார்பகங்கள் வெட்டப்பட்டன. இந்து மத குரு ஒருவர் எரியும் தீயில் உயிருடன் போடப்பட்டார். தமிழ் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். சிங்களம் மொழி மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

முக்கிய கவனிப்பு: 1958 இல் பிரபாகரனுக்கு வயது 4. மறந்து விடாதீர்கள்
4 வயது.

சோ, இந்து ராம், ஜெ.ஜெ. போன்றவர்களிடம் ஒரு கேள்வி?

இலங்கையில் தலைவிரித்தாடும் வன்முறையைக்கு காரணம் பிரபாகரனா?


புள்ளிராஜா

August 17, 2007 11:34 AM  
Blogger சிவபாலன் said...

யோகன் அண்ணா

பல முக்கியமான கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள்.. பதில் எங்கே என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது..

// அப்படி ஒரு நிலை வர ஆயுத வியாபாரிகள் விடுவார்களா? //


இது சிந்திக்க வேண்டிய வரிகள்..

கருத்துக்கு நன்றி!

August 17, 2007 11:41 AM  
Blogger சிவபாலன் said...

அனானி (புள்ளி ராஜா)

யார் காரணம் என்பதைவிட என்ன தீர்வு என்பது என் மனதில் இருக்கும் கேள்வி? நல்லது நடக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களும் மற்ற மனிதர்கள் போல் அமைதியாக வாழவேண்டும்..

நடக்கும் என்ற நம்பிக்கையில்..

August 17, 2007 11:45 AM  
Anonymous Anonymous said...

Praba is not responsible for 1958 riots and destruction..but Praba is responsible for everysingle tamil death and destructions after 1988 eversince he started fighting with IPKF

August 17, 2007 12:23 PM  
Anonymous Anonymous said...

now why we should ask foreign countries to intervene? why can't ltte single handedly win Tamil Elam? ltte is the one who chased away all mediaters. Ask ltte for solutions

August 17, 2007 12:24 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,

/* அப்ப எம்ஜிர் ஆட்சிக் காலம். எங்கு பார்த்தாலும் இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைகள் பற்றித்தான் பேச்சு */

முன்னாள் முதல்வர் அமரர் இராமச்சந்திரன் அவர்களின் இழப்பு ஈழத் தமிழினத்திற்குப் பேரிழப்பு.அந்த இழப்பில் இருந்து ஈழத் தமிழினம் இன்னும் மீளவில்லை.

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு சகல உதவிகளும் செய்தவர். அவர் அந்த உதவியைக் காலமறிந்து செய்திருக்காவிட்டால் இன்று விடுதலைப் புலிகளும் இல்லை. இப்போது இலங்கையில் மிஞ்சி இருக்கும் தமிழர்களும் இருந்திருக்க மாட்டார்கள்.

அமரர் இராமச்சந்திரன் அவர்கள் பற்றி அவரின் நினைவு தினமான மார்கழி மாதத்தில் ஒரு பதிவு போட எண்ணியுள்ளேன்.

ஜெயவர்த்தனாவின் அரசியல் சூழ்ச்சிக்குப் பலியாகி இந்திய இராணுவம் தமிழர்களுடன் மோதிய போதும், தொடர்ந்து சண்டையிடுமாறு கூறி விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர் மான்புமிகு இராமச்சந்திரன் அவர்கள்.

மத்திய அரசின் கொள்கை வேறு தனது கொள்கை வேறு எனவும், பிரபாகரன் எதைச் செய்கிறாரோ அதற்குத்தான் தான் ஆதரவு தருவேன் எனவும் உறுதி கூறியிருந்தார்.

பிரபாகரன் அவர்களைத் தனது சொந்தத் தம்பி போலத்தான் பார்த்தவர்.

மரணப்படுக்கையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட போதும், பண்டிருட்டி இராமச்சந்திரனை அழைத்து விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்தவர்.

ஆக, ஈழத் தமிழர்களின் பிரச்சனையை அரசியலாக்காமல், விளம்பரம் இல்லாமல், பல உதவிகள் செய்த இன மான உணர்வாளர்.

ஈழத்தில் அமரர் இராமச்சந்திரன் அவர்களைத் தவிர எந்த தமிழகத் தலைவருக்கும் சிலை இல்லை. அந்தளவுக்கு ஈழத் தமிழர்களின் மனங்களில் குடியிருப்பவர்.

தன்மானமுள்ள கடைசி ஈழத்தமிழன்/தமிழிச்சி இருக்கும் வரை அவர் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூர்வர்.

/* இதற்கிடையில் ராஜீவ் காந்தி மரனம் இந்தியத் தமிழர் சிந்தனையை சற்று மாற்றியது...ஊடகங்கள் மற்றொரு காரணமாக இருக்கலாம்.*/

இராஜீவ் காந்தியின் மரணம் துயரகரமான சம்பவம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், இராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறைகளும் , ஜெயவர்த்தனாவின் பொறிக்குள் அவர் வீழ்ந்ததாலும்தான் இந்தியப் படைகள் தமிழ்ப் படைகளுடன் மோத வேண்டி வந்தது என்பதை இலங்கையில் இந்தியப் படையில் பணியாற்றிய பல தளபதிகள், மற்றும் இல்ங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் டிக்சிற் ஆகியோர் சொல்கின்றனர். அதுதான் உண்மையும்.

தமிழர்களுக்கும் இந்தியப்படைகளுக்குமான சண்டை தவிர்த்திருக்கக் கூடியது எனவும் முன்னாள் இந்தியத் தளபதி கருத்துத் தெரிவித்திருந்தார்.

அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் ஜெயர்த்தனாவின் குள்ள நரித்தனத்தை,ஜெயவர்த்தனாவின் ஒவ்வொரு அசைவையும் நன்றாக அறிந்து வைத்திருந்தார். அதனால் ஜெயவர்த்தனாவால் அன்னை இந்திரா காந்தி அம்மையார் இருக்கும் வரை வாலாட்ட முடியவில்லை.

அன்னை இந்திரா காந்தியின் மரணவீட்டுச் சடங்கை இலங்கையில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்தனர். அதிகமான ஈழத்தமிழர்கள் தொலக்காட்சிக்கு முன்னால் கண்ணீர் மல்க, தமது சொந்த வீட்டில் நடந்த மரண வீடு போல உணர்ந்தனர்.

தமிழர் பகுதியெங்கும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதை அறுத்தெறிந்த சிங்களப் படைகள், "உங்களின் அம்மாவாடா இப்ப உங்களை வந்து காப்பாத்துவாள்" எனக் கேட்டுப் பல தமிழர்களைத் தாக்கினர்.

அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஈழத் தமிழர்கள் பிரச்சனையின் ஆழத்தை அறிந்தவர். ஈழத்தமிழினத்திற்கும் தமிழகத் தமிழர்களுக்கும் தொன்றுதொட்டு இருக்கும் உறவை நன்கு அறிந்தவர்.

அவர் இப் பிரச்ச்னையில் தனக்கு ஆலோசகர்களாக G.பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற ஈழப் பிரச்சனை, தமிழக மக்களின் உணர்வலைகள் ஆகியவற்றைத் தெரிந்தவர்களை அமர்த்தியிருந்தார்.

ஆனால் இராஜீவ் காந்தி இவர்களை ஒதுக்கி, ஈழப் பிரச்சனைகள் பற்றி அறியாத ரமேஸ் பண்டாரி போன்றவர்களை தனது ஆலோசகர்களாக நியமித்திருந்தார்.

ரமேஸ் பண்டாரி இலங்கைப் பிரச்சனையில் துளி கூட அனுபவமோ அறிவோ இல்லாதவர் என டிக்சிற் அவர்கள் Colombo Assignment எனும் புத்தகத்தில் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

பல தமிழக நண்பர்கள் இராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கினார் என எண்ணுகின்றனர். அது தவறு.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை சிங்களவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பில் கிளிங்ரன் அவர்கள் மொனிக்கா லுவின்ஸ்கியுடனான அந்தரங்க உறவுகள் குறித்த விசாரனைகளில் மொனிக்கா இரண்டாவது தடவையாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற நாள், அமெரிக்க மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஆணை பிறப்பித்தார்.

அரசியல்வாதிகள் தமக்கு உள்நாட்டில் நெருக்கடிகள் தோன்றும் போது மக்களைத் திசை திருப்ப இப்படியான நடவடிக்கைகளைச் செய்வது வழக்கம்.

இராஜீவ் காந்தியும் அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கினார்.

வி.பி.சிங் அவர்களுடனான சிக்கல், போர்பஸ் ஊழல் பிரச்சனை, ஜனாதிபதி ஜெயில் சிங் அவர்களுடனான பிரச்சனைகள், தொடர்ந்து 6 அல்லது 7 மாநிலத் தேர்தல்களில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி, இராஜீவின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட உடனடித் தாக்கம்...இப்படிப் பல சிக்கல்களை எதிர்நோக்கிய இராஜீவ் இங்கைப் பிரச்சனையில் தலையிட்டு கவனத்தைத் திருப்ப முயன்றார்.
இதுபற்றி விளக்கமாக நேரம் கிடைக்கும் போது ஆதாரங்களுடன் ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது.

தமிழக/இந்திய ஊடகங்கள் யாரின் கையில் இருகிறது என்பதயோ அவர்களின் நோக்கத்தையோ நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அதை நன்கு உணர்ந்தவர்.

/* இலங்கைத் தமிழர்கள் சுமார் 2000 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் உள்ளனர்.*/

தவறு. இலங்கை தமிழகத்தில் இருந்து பிளவுண்ட பகுதி. ஆக இலங்கை உருவாகிய காலத்திலிருந்தே தமிழர்கள் அங்கு வசிக்கிறர்கள். இராவண மன்னனும் தமிழ் மன்னன் என்பது பல இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை.

/* முக்கியமாக இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் வாழ்கின்றனர்.*/

சரி. உண்மை.

/* சிங்கள இனத்தவர் தமிழ் இனத்தின் மீது சிறுபான்மையினர் என்ற முறையில் அனைத்து வன் தாக்குதலையும் செய்கின்றனர்.*/

சிங்கள அடிப்படைவாதிகளைப் பொறுத்த வரையில் இலங்கை புத்த சிங்கள நாடு. அதனால் அங்கு வேறு யாருக்கும் இடமில்லை.

இதுபற்றி நான் கடந்த மாதம் ஒரு பதிவு போட்டிருந்தேன். நேரம் கிடைக்கும் போது படியுங்கள். கிறிஸ்தவர்-முஸ்லிம்கள்-மலையாளிகள்-இந்தியத் தமிழர்-இலங்கைத் தமிழர் என்பதுதான் அப்பதிவின் தலைப்பு. அதாவது எல்லாச் சிறுபான்மை மக்களையும் சிங்களவர்கள் காலத்திற்குக் காலம் தாக்கித்தான் வந்திருக்கின்றனர்.

முதலில் கிறிஸ்தவர்கள், பின்னர் முஸ்லிம்கள், அதன் பின் மலையாளிகள், அதற்குப் பிறகு தமிழகத் தமிழர், இறுதியாக இலங்கைத் தமிழர்.

இன்னுமொரு பதிவும் போட்டிருந்தேன். பாகிஸ்தானிடமிருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அப்பதிவின் தலைப்பு. அதையும் படித்துப் பாருங்கள்.

August 17, 2007 12:34 PM  
Anonymous Anonymous said...

சிங்கள மக்கள் நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு கொடுமையானவர்களல்ல. 1948, 1977, 1983 ஆண்டுகளில் தென்னிலங்கையில் (குறிப்பாக இலங்கையின் தலைநகர் கொழும்பில்) தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட மூன்று இனக்கலவரங்களுக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளே காரணம். இந்த இனக்கலவரங்களின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களைவிடவும் சிங்கள மக்களால் பாதுகாக்கப்பட்ட தமிழ் மக்கள் பல மடங்கு. மேலும் இந்த இனக்கலவரங்களின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களைவிடவும், 1983 ஆண்டின் பின்னர் புலிகளால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த எண்ணிக்கை இருபதினாயிரத்திறகும் முப்பதினாயிரத்திற்கும் இடைப்பட்டதாக மதிப்பிடப்படுகின்றது.

1983 ஆண்டு கடுமையான யுத்தம் ஆரம்பிக்க முன்னர் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கு கிழக்கில் 20 இலட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் கடந்த 24 வருடகால யுத்தத்தில் ஏறத்தாள எட்டு இலட்சம் தமிழ்மக்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து வெளியேறி தமிழ்நாடு உட்பட உலகெங்கும் வாழ்கின்றார்கள். இதைவிடவும் புலிகளின் கொலைப்பயமுறுத்தல்களுக்கு பயந்து மூன்று இலடசம் தமிழ்மக்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கு கிழக்குப்பகுதியிலிருந்து வெளியேறி இப்போது கொழும்பில் வாழ்கின்றார்கள்.

இலங்கையில் இன்னுமொரு கால் ஆண்டு யுத்தம் நீடிக்குமாயின் இலங்கையில் எவ்வளவு தமிழர்கள் எஞ்சுவார்களோ தெரியாது. தற்போதைய யுத்தம் இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையிலானது. ஆனால் பெரும்பான்மையான தமிழ் மக்கள் இந்த யுத்தத்தை நிராகரித்து சமாதானமாக வாழவிரும்புகின்றார்கள்.

August 17, 2007 12:40 PM  
Anonymous Anonymous said...

today there are more Indian Origin Tamil in SL than Original SL Tamil :)
and that Indian Origin Tamil is mostly living among Singalese. Indian Origin tamil are not protected by any "force"..Indian origin tamil are the worse expolited people in SL but they never talked about descrimination based on Language/Ethnicity(may be they don't have time to think about anything else because they have to do hard labourous work atleast 18hrs a day to have a half decent meal)..only ltte knows what is tamils real problem..even normal tamil don't know what he or she really wants....

August 17, 2007 12:58 PM  
Blogger ILA (a) இளா said...

//சிபா நானும் கூட நம் இலங்கை சொந்தங்களைக் குறித்து எழுதி வைத்திருக்கிறேன். நீங்களும் எழுதி இருக்கிறீர்கள் ஒத்த நிகழ்வு போல் இருக்கிறது.//

Repeatey

August 17, 2007 2:36 PM  
Blogger Thamizhan said...

1971ல் நான் இலங்கை சென்றிருந்த போது ஒரு அழகான நாட்டைக் கண்டேன்.பல தமிழர்கள் நல்ல நிலையில் இருந்தனர்.கொலம்பில் பல யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் நல்ல நிலையில் வசதியாக,ஆனால் சிங்களவர் பொறாமைப் படுகிறார்கள்,என்று சொல்லி வாழ்ந்தனர்.
இலங்கை சரித்திரத்திலே யாழ்ப் பாணத்துத் தமிழர்கள் பெரும் பங்குள்ளவர்கள்.இலங்கை விடுதலைக்குப் பாடுபட்ட பொன்.இராமநாதன் அவர்கள் லண்டனிலிருந்து வந்த போது,குதிரையை அவிழ்த்துவிட்டு அந்த அல்ங்கார வண்டியைச் சிங்களவரே இழுத்துச் சென்றனராம்.

சிங்கள அரசியல் வாதிகள் தாங்கள் தேர்தலில் வெல்வதற்காக தமிழர்கள் பகடைக் காயாக்கப் பட்டன்ர்.
தமிழகத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் சென்ற மலையகத் தமிழர் இழிவு,அழிவு,வெளியேற்றம் என்று பெரிய விலை கொடுத்தனர்.அப்போது யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழரைச் சரியாக ஆதரிக்க வில்லை.
அடுத்து அங்கேயே,சிங்களவர் (இந்திய ஒரிசா பக்கத்திலிருந்து) வருவத்ற்கு முன்னிருந்தே,தமிழ் மன்னர்கள் ஆட்சியில்ருந்து வாழ்ந்த வட்க்கு,கிழக்கு தமிழர்கள் மொழியுரிமை,வேலை கல்வி உரிமைகள் என்று ஒவ்வொன்றாக இழந்தனர்.புத்த பிக்குகள் இலங்கை புத்த மதத்திற்காகவே உருவாக்கப் பட்டச் சிற்ப்புத் தீவு,அங்கே மற்ற மதங்கள்,மக்களுக்கு இடமில்லை யென்று மூளைச் சலவை செய்ய ஆரம்ப்பித்து வெற்றி கண்டனர்.

காந்திய முறையில் போராடிய தமிழர்கள் அவமானப் படுத்தப் பட்டனர்.சிறந்த மனிதர் செல்வநாயகம் பாராளுமன்றக் கட்டிடத்திலிருந்தே அம்மணமாக,சிங்களக் காவலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க விரட்டி விரட்டி அடிக்கப் பட்டார்.

அவர் கடைசியில் தமிழீழம் தான் ஒரே வழி என்று சொல்லி தமிழீழத்தின் தந்தை செல்வா என்றழைக்கப் படுகிறார்.அனைத்துத் தமிழர்களும் 90% க்கு மேலே ஓட்டளித்துத் தனி வடக்கு,கிழக்கு சேர்ந்த தமிழீழம் தான் வேண்டும் என்றனர்.

1983 லே தாங்கள் கூறிய இனப் படுகொலை சொல்லொன்ணாத் துயரத்தில் அரசு ஊழியர்கள் முழு உதவியுடன் ந்டந்தது.கண்களைத் தோண்டிக் காலால் மிதித்தது நடந்தது!ஆனாலும் சிங்கள நண்பர்களும்,பல வேலைக் காரர்களும் காப்பாற்றிய தமிழர்கள் உண்டு.
17 வய்தே ஆன பிரபாகரன் சிங்களக் கைக்கூலியான மேயரைக் கைத்துப்பாக்கியால் சுட்டு,இன்று முப்படையுடன் புலிகளாகப் போராடுகிறார்.அப்போதெல்லம் ஆதரவளித்த இந்து ராம் இப்போது இரண்டு முறை இந்துவின் முதல் பக்கத்திலே பிரபாகரனைக் கொன்றிருக்கிறார்.

இனித் தமிழர் சிங்களவருடன் சம்மாக வாழ முடியாது என்பதுதான் உண்மை.கொல்லப் படுவதா,கடலில் விழுவதா,வென்று வாழ்வதா என்பதில் வென்று வாழ உலகத் தமிழர்கள்,விவரங்கள் தெரிந்தவர்கள் ஆதரிக்கிறார்கள்.

August 17, 2007 4:50 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,

எனது பாகிஸ்தானிடமிருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டும் எனும் பதிவையும் அப் பதிவிலுள்ள பின்னூட்டங்களையும் படித்துப் பாருங்கள். இலங்கை இனப்பிரச்சனைக்கான இன்னொரு காரணத்தையும் அதில் சொல்லியிருக்கிறேன்.

/* மலையகத் தமிழர் இழிவு,அழிவு,வெளியேற்றம் என்று பெரிய விலை கொடுத்தனர்.அப்போது யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழரைச் சரியாக ஆதரிக்க வில்லை.*/

தமிழன் ஐயா,

நீங்கள் சொல்வது 100% சரியல்ல. அக் கால கட்டத்தில் இலங்கையில் தமிழ்த் தேசியவாதம் வளரவில்லை. அப்போது இலங்கைத் தமிழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்திருந்தனர். சிங்களவர்களைப் போல. சிங்களவர்களுள் கண்டிச் சிங்களவர், கரையோரச் சிங்களவர் எனவும் பல சாதிப் பிரிவுகளும் உண்டு. அதுபோல இலங்கைத் தமிழர்களுக்குள்ளும் யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர் எனவும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்குள்ளேயே பல பிரிவுகள் இருந்தன.

1965ல் இலங்கையின் பிரதமராக இருந்த டட்லி செனநாயக்கா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்துடன் செய்த ஒப்பந்தத்தையே அமுல்படுத்த வேண்டாம் என யாழ்ப்பாணத்தில் இருந்து சில தமிழ் பிரிவினர் கேட்டுக் கொண்டனர்.

ஆக அப்போது தமிழர்களுக்குள் எந்த விடயத்திலும் ஒற்றுமை இருக்கவில்லை. இது மலையகத் தமிழர்கள் விடயத்தில் மட்டுமல்ல. இலங்கைத் தமிழர் விடயங்களிலேயே
ஒற்றுமை இல்லாமல் செயற்பட்டார்கள்.

மாலன் அவர்களுக்கான பதிலில் இதுபற்றி எழுதியிருந்தேன். நேரம் கிடைக்கும் போது கீழுள்ள பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.

பதிவு 1

பதிவு 2

August 17, 2007 5:51 PM  
Anonymous Anonymous said...

சிவபாலன்,
நல்ல பதிவு. ஈழத்தமிழர்களின் விடிவு எங்கள் தமிழீழத்தின் மூலம் தான் என்பது என் நம்பிக்கை.

August 17, 2007 6:11 PM  
Anonymous Anonymous said...

I am sorry - I am having problems with eKalappai - to type in English.

My understanding, having grown up in central TN all my childhood life, was similar. But my extensive reading and mingling with SL Tamils since moving out of TN have only raised these questions:
//கொஞ்சம் இரக்க உணர்வு உள்ள சிங்கள மக்கள் கூட மாறிக் கொண்டு போவதால
Are all Sinhalese bad? If some are good, what makes/made them change? If it is LTTE and other orgs like that make them change their feelings toward SL Tamils, what makes Sinhalese think that all SL Tamils support LTTE?
//இலங்கைத் தமிழர்களுக்குள்ளும் ...பல பிரிவுகள் இருந்தன
I have seen this personally in depth in my interaction with SL Tamils (in the last few years)! I have mentally attributed this to be the cause of the lack of coordination in early resistance.
//யார் காரணம் என்பதைவிட என்ன தீர்வு என்பது என் மனதில் இருக்கும் கேள்வி?
I am afraid - again my personal belief - that it is simply too late. Violence is never the solution. Unless SL Tamils produce massive effort to bring international awareness and subsequent pressure.. For e.g., many nations still refer to this internal civil strife... Anyway, for the sake of SL Tamils still living there, we can hope/pray for miracles.

I will hope/wait for someone to correct me. Thanks!

August 17, 2007 7:46 PM  
Blogger உண்மை said...

நல்ல கட்டுரை சிவபாலன் சார். எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை.

இலங்கைத் தமிழர்களை ஏன் தமிழ்நாட்டு பார்ப்பனர்களும் துக்ளக் சோவும் இந்து ராமும் எதிர்க்கின்றனர்?

August 17, 2007 7:58 PM  
Anonymous Anonymous said...

//இலங்கைத் தமிழர்களை ஏன் தமிழ்நாட்டு பார்ப்பனர்களும் துக்ளக் சோவும் இந்து ராமும் எதிர்க்கின்றனர்?
//

இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கு என்ன ஆதாரம் என்றுதான் புரியவில்லை. கீழே இருக்கும் கேள்விகளை பார்த்தால் இவர்களின் நிலைப்பாடுகள் ஓரளவிற்கு விளங்கும்.

//If it is LTTE and other orgs like that make them change their feelings toward SL Tamils//

//Violence is never the solution. Unless SL Tamils produce massive effort to bring international awareness and subsequent pressure.. //

இங்கு பதில் இட்டிருக்கும் பல இலங்கை தமிழர்கள் இதற்கும் பதிலளிப்பார்கள் என்று நம்புவோம்.

August 17, 2007 9:33 PM  
Blogger பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

//
முன்னாள் முதல்வர் அமரர் இராமச்சந்திரன் அவர்களின் இழப்பு ஈழத் தமிழினத்திற்குப் பேரிழப்பு.அந்த இழப்பில் இருந்து ஈழத் தமிழினம் இன்னும் மீளவில்லை.

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு சகல உதவிகளும் செய்தவர். அவர் அந்த உதவியைக் காலமறிந்து செய்திருக்காவிட்டால் இன்று விடுதலைப் புலிகளும் இல்லை. இப்போது இலங்கையில் மிஞ்சி இருக்கும் தமிழர்களும் இருந்திருக்க மாட்டார்கள்.

அமரர் இராமச்சந்திரன் அவர்கள் பற்றி அவரின் நினைவு தினமான மார்கழி மாதத்தில் ஒரு பதிவு போட எண்ணியுள்ளேன்.

ஜெயவர்த்தனாவின் அரசியல் சூழ்ச்சிக்குப் பலியாகி இந்திய இராணுவம் தமிழர்களுடன் மோதிய போதும், தொடர்ந்து சண்டையிடுமாறு கூறி விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர் மான்புமிகு இராமச்சந்திரன் அவர்கள்.

மத்திய அரசின் கொள்கை வேறு தனது கொள்கை வேறு எனவும், பிரபாகரன் எதைச் செய்கிறாரோ அதற்குத்தான் தான் ஆதரவு தருவேன் எனவும் உறுதி கூறியிருந்தார்.

பிரபாகரன் அவர்களைத் தனது சொந்தத் தம்பி போலத்தான் பார்த்தவர்.

மரணப்படுக்கையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட போதும், பண்டிருட்டி இராமச்சந்திரனை அழைத்து விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்தவர்.
//
வெற்றி,

மேலே நீங்கள் கூறியுள்ள தரவுகள் எந்த அடிப்படையில் நீங்கள் கூறினீர்கள் என்பதை விளக்க முடியுமா?

நான் தெரிந்துக்கொள்வதற்க்காக கேட்கிறேன்

August 17, 2007 11:15 PM  
Anonymous Anonymous said...

i don't uderstan why sl tamils doesn't learn sinhalese and be a part of the country....

tamil people who migrated to singapore malaysia south africa learned the mmigrated country national language and survived there...

only here sl tamils doesn't get integrateed and don't learn sinhalese...

btw, these sl tamils went as refugees to germany, france, etc. and leanred german, french very well.. then why not sinhalese in their own country??

August 18, 2007 2:21 AM  
Blogger ராஜ நடராஜன் said...

மனம் கனக்கிறது.பல முடிச்சுக்கள்.பிரச்சினையின் நுனி இழையை எங்கிருந்து கட்டவிழ்த்து எங்கே சீர்செய்வது?இத்தனைக்கும் பிறகும்,சமாதான வார்த்தைகளுக்குப் பிறகும் பொர்ப்படலம்.போர்க்குணமும்,இலட்சியமும் இருந்த இடத்தில் ஒருங்கிணைப்புகள் இல்லாமையும்,உற்பூசலும் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்கினாலும்,ராஜிவின் துன்பியல் முடிச்சுகளை மேலும் சிக்கலாக்கியதென்பதில் பெரும்பான்மையோருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.சுனாமியால் மாற்ற இயலாத மனோபாவங்கள்,பேச்சு வார்த்தைகளால் முடியாத மன இறுக்கம் இத்தனை ரத்த சிந்தலுக்குப் பின்னும் ஓர் சுதந்திரமோ அல்லது சேர்ந்து வாழும் நிலையோ எப்பொழுது,எப்படி என்றுதான் தெரியவில்லை.காலம்தான்(எப்பொழுது)தீர்ப்பு சொல்லவேண்டும்.

August 18, 2007 3:34 AM  
Blogger கொழுவி said...

//tamil people who migrated to singapore malaysia south africa learned the mmigrated country national language and survived there...//

அப்பு ராசா.. சிங்கப்பூருக்கு குடியேறச் சென்றவர்கள் மலாய் படிக்கட்டும். ஜேர்மனுக்கு குடியேற சென்றவர்கள் ஜேர்மன் படிக்கட்டும். அமெரிக்காவிற்கு குடியேறச் சென்றவர்கள் ஆங்கிலம் படிக்கட்டும். நல்லது. இதெல்லாம் குடியேறச் சென்றவர்களுக்குத் தான் பொருத்தம்.

உங்களுக்கு யாரய்யா சொன்னது ? இலங்கைத் தமிழர்கள் குடியேறச் சென்றது என.. ? தமிழகத்தில தமிழர்களுக்கு உள்ள அதேயளவான வரலாறு ஈழத்தில தமிழருக்கு இருக்கு பாருங்கோ. உங்களைப் பாத்து இந்தி படித்து இந்தியா என்ற ஒற்றையாட்சி நாடாகலாமே.. எதற்கு தமிழ்நாடு கேரளா கர்நாடகா எனத் தனித்தனி மாநிலங்கள்..? என கேட்டால் கோபம் வருகிறதாயிருந்தால் அதே கோபம் எனக்கும் வருகிறது.

இப்பிடியான குடியேறச் சென்றவர்கள் என்ற கதையை விடுங்கோ இனி. உண்மையச் சொல்லப்போனால் வரலாற்றில் அறியக் கூடிய காலத்தில் வந்திறங்கிய அதாவது குடியேறிய சிங்களவரைக் கூட தமிழ் படித்திருக்கலாமே என முட்டாள்த்தனமா நாங்கள் கேட்டதில்லை. அவை குடியேறினவையோ இல்லையோ.. அவைக்கென ஒரு பாரம்பரிய பண்பாட்ட நிலம் உண்டு. அவர்களின் நிலம் அவர்களுக்கு. எங்களின் நிலம் எங்களுக்கு.

பக்கத்தில தமிழ்நாட்டில தமிழ் புரியக்கூடிய அளவில தானே இருக்கிறீர்கள். எத்தனையோ வருசமா தமிழில தானே கத்துறம். விளங்கேல்லையோ..? ராய்ட்டர் காரனே இப்ப தமிழில சொன்னால் விளங்கிக் கொள்கிறான்.

முதலில இந்த தொப்பள் கொடி உறவு தாய் சேய் உறவு எண்டு சொல்லுறவையை ஏத்தி வைச்சு கேள்வி கேட்கவேணும். ஈழத் தமிழருக்கும் தமழக தமிழருக்கும் தாய் சேய் உறவும் தொப்புள் கொடி உறவும் ஒண்ணும் கிடையாது.

அது சகோதர உறவு தான். அதுவும் இரட்டைக் குழந்தை உறவு தான்.

இதுக்கு பிறகும் குடியேறச் சென்றவர்கள் குடியேறச் சென்றவர்கள் என யாரேனும் கேள்வி எழுப்பினால் .. வேறென்ன செய்ய முடியும் ? யாரேனும் வெள்ளைக் காரனுக்கு தமிழில் சொல்லி விளங்கப் படுத்த முயற்சிக்கலாம்.

August 18, 2007 10:56 AM  
Anonymous Anonymous said...

இலங்கையின் மூத்த தமிழ் தலைவர்களான எஸ.ஜே.வி.செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் போன்றவர்களால் முதன்முதலில் தமிழீழக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வெறுமனே தமிழீழக்கோரிக்கையை முன்வைத்துவிட்டு பாராளுமன்றப்பாதையை நம்பியிருக்கிறார்கள் என்று கூறியே 1970 ஆன்டின் பின்னர் இளைஞர்கள் ஆயதமேந்திப் போராட ஆரம்பித்தார்கள்.

ஆனால் நடநதது என்ன?

தமிழீழக்கோரிக்கையை முன்வைத்துவிட்டு பாராளுமன்றப்பாதையை நாடியவர்களாலும் தமிழீழம் கிடைக்கவில்லை, ஆயதமேந்திப் போராடி தமிழர்களும் சிங்களவர்களுமாக ஏறத்தாள 110 ஆயிரம் பேர் இறந்தபின்னரும் தமிழீழம் இதுவரையில் கிடைக்கவில்லை. இலங்கை இராணுவத்திற்கு எதிராக போராடுவது என்பதோடு நிறுத்திவிடாமல், தமிழ்த்துரோகிகளை அழித்தொழிக்க வேண்டுமென்று கூறி தலைவர் அ.அமிர்தலிங்கம் உட்பட பல அரசியல் தலைவர்களையும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் கொன்றொழித்தும் தமிழீழம் கிடைக்கவில்லை. எனவே ஆயதமேந்தி போராடினாலென்ன போரடவிட்டாலென்ன தமிழீழம் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவட்டது.

ஆயுதமும் பணமும் இருந்தால் மாத்திரம் தமிழீழத்தை அமைத்துவிட முடியாது. சிறந்த கொள்கையுடைய அரசியல் தலைமையும் அத்தியாவசியம்.

இளைஞர்கள் ஆயதமேந்திப் போராட முன்னர், இலங்கை இராணுவம் தொடர்பான அச்சங்கள் இருந்தபோதிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக சிந்தித்தார்கள, செயற்பட்டார்கள்;. ஆனால் இப்போது இலங்தைத் தமிழ் மக்களின் அந்த சுதந்திரம் பறிபோய்விட்டது. இலங்தைத் தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவம் தொடர்பான பயங்கள் முற்றாக நீங்காவிட்டாலும், இப்போது தமிழ் ஆயதக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கே மிகஅதிகமாக பயப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் உண்பதற்கும் பற்களை துலக்குவதற்கும் மாத்திரமே வாய்களை திறக்கின்றார்களென 10 வருடங்களுக்கு முன்னரே நோர்வேயைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் ஒருவர்; குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா ஆயதப்பயிற்சி அளித்தது இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்றுத்தவறு. இந்திய அரசை எதிர்த்து போராடுகின்ற ஏதாவதொரு குழுவொன்றிற்கு இலங்கை ஆயதப்பயிற்சி அளித்திருந்தால், அல்லது அவ்வாறான குழுவொன்றிற்கு இலங்கை முதலமைச்சர் ஒருவர் பணம் கொடுத்திருந்தால் இந்திய மக்கள் அதனை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? இலங்கை ஒரு மிகச்சிறிய நாடென்பதால் மிகப்பெரிய இந்திய தேசம் ஏறி மிதிக்கலாமா?

August 18, 2007 11:27 AM  
Anonymous Anonymous said...

//இலங்கைத் தமிழர்களை ஏன் தமிழ்நாட்டு பார்ப்பனர்களும் துக்ளக் சோவும் இந்து ராமும் எதிர்க்கின்றனர்?
//

//இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கு என்ன ஆதாரம் என்றுதான் புரியவில்லை.//

புதிதாய்க் கேட்பது போல இப்படி ஆதாரம் கேட்பதும் வழமையாகக் கையாளப்படும் உத்தி!

August 18, 2007 1:16 PM  
Blogger வெற்றி said...

பாரி.அரசு,

/* வெற்றி,

மேலே நீங்கள் கூறியுள்ள தரவுகள் எந்த அடிப்படையில் நீங்கள் கூறினீர்கள் என்பதை விளக்க முடியுமா?
நான் தெரிந்துக்கொள்வதற்க்காக கேட்கிறேன் */

உங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி. நான் மேலே சொல்லியுள்ள கருத்துக்களை ஈழத் தமிழர்களின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே சொல்லியிருந்தார். அவர் சொன்னதை நீங்களும் பார்க்க/கேட்க
இங்கே கிளிக் செய்யுங்கள்.

பாரி,
பிரபாகரன் அவர்கள் இலங்கைத் தமிழில் கதைக்கிறார். ஏதாவது புரியாவிட்டால் கேளுங்கள்.

August 18, 2007 6:20 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv